கோவையில் தொடரும் மோசடி : 16 லட்சத்தை பறிகொடுத்த தம்பதியினர்... காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார்!
கோவையில் வீடு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய நபரிடமிருந்து 16 லட்சத்தை பணத்தைப் பெற்றுத் தருமாறும் , பணத்தை கேட்டால் ஆள் வைத்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்
கோவை மாவட்டம், தொப்பம்பட்டியைச் சேர்ந்த பானுமதி மற்றும் அவரது கணவர் தனபால், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாங்குவதற்காக மீடியேட்டர் ஒருவரின் மூலம் ஏற்பாடு செய்து உள்ளனர். அந்த வீட்டின் விலை ரூ.39 லட்சமாக கூறப்பட்டது. பின், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல தவணைகளாக மொத்தம் ரூ.16 லட்சம் பணம் அவர்கள் வழங்கி உள்ளனர். ஆனால் வீட்டின் டாக்குமெண்ட்களை வைத்துப் வங்கியில் வீட்டு கடன் கேட்ட போது, கடன் மறுக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து, சிவா மற்றும் தீபா எனும் இருவரே அந்த வீட்டை பானுமதி - தனபால் தம்பதிக்கு வழங்கிய உள்ளனர். வீடு வாங்கியதற்கான பணம் கொடுக்கல், வாங்கல் ஒப்பந்தத்தின் கால அவகாசம் நாளை முடிவடைய இருக்கின்ற நிலையில், மீதமுள்ள பணத்தை வழங்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் திட்டவட்டமாக கூறி உள்ளனர்.
இந்நிலையில் வங்கியில் லோன் கிடைப்பதில் காலதாமதம் ஆன நிலையில் இறுதியில் லோன் கிடைக்காது என தெரிவித்து விட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பானுமதி குடும்பத்தினர் தாங்கள் கட்டிய பணத்தில் செலவினங்கள் போக மீதி பணத்தை திருப்பி தருமாறு கூறியுள்ளனர் அப்போது பணத்தைப் பெற்ற சிவா என்பவர் ஒரு ரூபாய் கூட நான் திருப்பி தர மாட்டேன் என கூறியுள்ளார்.
அதன் பிறகே, தாங்கள் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த குடும்பத்தினர் தொடர்ந்து தாங்கள் நகை அடமானம் வைத்தும் கடன் பெற்றும் இருக்கும் சேமிப்பு பணத்தை வைத்து கொடுத்த பணத்தை தயவு கூர்ந்து திருப்பி தருமாறு சிவாவிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் பணம் தர முடியாது மீறி பணத்தை கேட்டால் உங்களால் நிம்மதியாக வாழ முடியாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பானுமதி குடும்பத்தினர் சிவாவின் அடியாட்களுக்கு பயந்து வீட்டுக்கு கூட செல்லாமல் அவதியுற்று வருவதாகவும் தங்கள் பணத்தை ஏமாற்றி நபரிடம் இருந்து பெற்று தருமாறு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
வீடு வாங்குவதற்கு கொடுத்த பணத்தை ஒப்பந்தபடி கொடுக்க முடியாததால், பணத்தை திரும்பி கேட்டால் தம்பதிக்கு பணத்தை திருப்பி தர முடியாது என கூறி 16 லட்சத்தை மோசடி செய்ய நினைக்கும் வீட்டின் உரிமையாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்று சொந்த வீட்டின் கனவுடன் வாழும் மக்களின் வீடு கனவு நினைவாகும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.