"பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்!
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பேரை ஆபரேஷன் மகாதேவ் மூலம் கொன்று பழிதீர்த்துக்கொண்டதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் மக்களவையில் தொடங்கிய நிலையில், அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது ஆபரேசன் மகாதேவின் ஒரு பகுதியாகக் கொல்லப்பட்ட 3 பேரும் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் எனக் கூறினார். மே முதல் ஜூலை வரை பஹல்காம் குற்றவாளிகளைக் கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொண்டதாகவும் ஜூலை 22ஆம் தேதி பயங்கரவாதிகளை அடையாளம் கண்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆபரேஷன் மகாதேவில் மூன்று பேரைச் சுட்டுக்கொன்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? எனப் பயங்கரவாதிகள் மூவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி எதிர்க்கட்சியினரைப் பார்த்து அமித்ஷா கேள்வியெழுப்பினார் ஆபரேசன் சிந்தூர் திட்டத்தின்படி 22 நிமிடங்களில் 9 முகாம்களை அழித்தாகவும் பொதுமக்களில் ஒருவர் கூட இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். பாகிஸ்தானின் இதயத்தைத் தாக்கி அழித்ததாகவும் அந்நாட்டின் தாக்குதல் இந்தியாவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் அமித்ஷா குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பாகிஸ்தான் செல்லவிடாமல் தடுத்ததாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்த பின்னரும், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது ஏன்? எனவும் அமித்ஷா கேட்டார். கொல்லப்பட்டவர்களிடமிருந்து பாகிஸ்தான் அடையாள அட்டைகள், அந்நாட்டு சாக்லேட்டுகள் - துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.