இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள்.. இன்று மாலை விண்ணில் பாய்கிறது
புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ-நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் GSLV F-16 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
இஸ்ரோ மற்றும் நாசா சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடிவமைத்துள்ளது. பல்வேறுகட்ட சோதனைகள் முடிந்த நிலையில் நிசார் செயற்கைக்கோள் GSLV F-16 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உ பணிகளும் நிறைவடைந்து உள்ளன. ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் செயற்கைக்கோள் புவியிலிருந்து 743 கிலோ மீட்டர் தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 'நிசார்' செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 392 கிலோ எடையைக் கொண்ட, ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடர் மேலாண்மை உட்பட பல்வேறு அம்சங்கள்குறித்த தகவல்களைப் பெற முடியும்.
இந்தச் செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்க உள்ளது. அதற்காக எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிசார் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்களும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.