பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி இந்தியாவிடம் யாரும் கூறவில்லை - பிரதமர் மோடி
பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி உலகின் எந்த நாடும் இந்தியாவிடம் கூறவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம்மீது மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது, பஹல்காமில் மதத்தின் பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் தலைமையகங்களை இந்திய ராணுவம் 22 நிமிடங்களில் துல்லியத் தாக்குதல் நடத்தி அழித்தொழித்ததாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதில் இருந்தே சரியான பாதையில் பயணித்ததாகவும், இதற்காக ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.
இந்தியாவின் பலமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் நிலைகுலைந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தான் மன்றாடியதாகவும் கூறினார். பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் தாக்குதலைப் பாகிஸ்தான் எப்போதும் மறக்காது என்றார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை இந்திய விமானப்படை நூறு சதவீதம் உறுதி செய்தது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள்மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தோம் என்றும் பிரதமர் கூறினார். பாகிஸ்தானால் இனி அணு ஆயுத மிரட்டல்கள் எல்லாம் விடுக்க முடியாது என்று கூறிய பிரதமர், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது, மீண்டும் பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி உலகின் எந்த நாடும் இந்தியாவிடம் கூறவில்லை என்ற பிரதமர் மோடி, மே மாதம் 9 ஆம் தேதி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பல மணி நேரம் தம்மைத் தொடர்புகொள்ள முயன்றதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக ஜே.டி.வான்ஸ் கூறியதாகவும், அதற்கான விலையைப் பாகிஸ்தான் கொடுக்க நேரிடும், எங்களின் தாக்குதல் பலமானதாக இருக்கும் என்று ஜே.டி.வான்ஸிடம் தாம் தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வந்த நிலையில், தற்போது எந்த நாட்டின் தலையீடும் இல்லை என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.