கமல்ஹாசன் எனும் நான்.. மாநிலங்களவை எம்.பி-யாக தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்பு!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூலை 25 ) மாநிலங்களவையில் எம்.பி.யாகக் கமல்ஹாசன் எனும் நான் என்று தமிழில் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதேப்போல் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்தது. அவர்களுக்கான பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில், காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் முன்னதாகக் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. அதில் திமுக, அதிமுக சார்பில் முன்னிறுத்தப்பட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில், திமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழில் பதவியேற்ற கமல்ஹாசன்:
திமுகவின் கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கக் கமல்ஹாசன் இன்று தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் நாடளுமன்றத்திற்கு வருகைதந்தார். பதவியேற்புக்கு முன்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியனாக எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடமையைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில், இன்று உறுப்பினராகப் பதவியேற்கும் முன்னர், தமிழில் பதவிபிராமணத்திற்கான உறுதிமொழியை ஏற்றார். அப்போது அவர் கூறியதாவது, மாநிலங்களை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்" என்று உறுதிமொழிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர் மாநிலங்கவையில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேடுகளில் கையெழுத்திட்டு பதவியேற்றார்.
கமல்ஹாசனுடன் திமுகவின் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், மநீம தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோர் வரும் திங்களன்று எம்.பி.யாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.