அதிநவீன தொழில்நுட்பமும் கைகொடுக்கவில்லை! தற்கொலையா? மர்மம் விலகுமா?
புதுடெல்லி: கடந்த ஆறு நாட்களாகக் காணாமல் போயிருந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி, திரிபுராவைச் சேர்ந்த 19 வயது சிநேகா தேப்நாத்தின் சடலம், யமுனை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் இன்று உறுதிப்படுத்திய இந்தத் தகவல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 7 ஆம் தேதி காலை, காணாமல் போன சில மணி நேரங்களிலேயே அவரது அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது, அன்று முதல் சிக்னல் இல்லை. இது ஒரு பெரும் மர்மமாகவே இருந்து வந்தது.
தென் டெல்லியில் உள்ள பரியாவரன் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்த சிநேகா தேப்நாத், ஜூலை 7 ஆம் தேதி காலை தனது குடும்பத்தினருடன் கடைசியாகப் பேசியுள்ளார். சரை ரோஹில்லா ரயில் நிலையத்திற்குச் செல்வதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், அதன் பிறகு அவரது அலைபேசி முடங்கிப் போனது. சிநேகாவைத் தேடும் பணி அசுர வேகத்தில் நடந்தது. மெஹ்ரௌலி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், சிநேகாவின் அறையில் இருந்து ஒரு திடுக்கிடும் கடிதம் கண்டெடுக்கப்பட்டது.
யமுனை ஆற்றின் சிக்னேச்சர் பாலத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அந்தக் கடிதத்தில் சிநேகா குறிப்பிட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. நான் ஒரு தோல்வியடைந்தவளாகவும், சுமையாகவும் உணர்கிறேன்... இப்படி வாழ்வது தாங்க முடியாததாக இருந்தது, என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது, உறவினர்களை நிலைகுலைய வைத்துள்ளது.
காவல்துறையின் தொழில்நுட்பக் கண்காணிப்பில் சிநேகாவின் கடைசி அலைபேசி இருப்பிடம் சிக்னேச்சர் பாலம் அருகிலேயே இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஒரு வாடகை கார் ஓட்டுநரும், அன்றைய தினம் சிநேகாவை அந்தப் பாலத்தில் இறக்கிவிட்டதாக பகீர் தகவல் அளித்துள்ளார். மேலும், அதிகாலையில் ஒரு பெண் பாலத்தின் விளிம்பில் தனியாக நின்றிருந்ததாகவும், பின்னர் காணாமல் போனதாகவும் சில சாட்சிகள் கூறியுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து, யமுனை ஆற்றில் போர்க்கால அடிப்படையில் தேடுதல் வேட்டையை நடத்தினர். சிக்னேச்சர் பாலத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்குக் கீழ்ப்பகுதியில், கீதா காலனி மேம்பாலம் அருகே மிதந்த ஒரு பெண் சடலம், சிநேகாவின் உடல் அமைப்பு மற்றும் ஆடைகளுடன் ஒத்துப்போனது. பின்னர் அவரது குடும்பத்தினர் சடலத்தை அடையாளம் கண்டு உறுதி செய்தனர். சிநேகா கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், ஜூலை 7 ஆம் தேதி அதிகாலையில் தனது நண்பர்களுக்குப் பிரிவு செய்திகளை மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பியதாகவும் புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சோக சம்பவம், இளம் வயதினரின் மனநலம் குறித்த தீவிர விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.