தமிழகத்தில் 40 டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர்கள் இடமாற்றம் – டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
தமிழகத்தில்டிஎஸ்பி, உதவி ஆணையர் பொறுப்பில் உள்ள 40 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை காவல்துறை உள்ளிட்ட பிற மாவட்ட காவல்துறை மற்றும் பல்வேறு புலனாய்வு பிரிவுகளில் பணியாற்றி வந்த போலீஸ் டிஎஸ்பிக்கள், உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் இந்த இடமாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகச் சென்னை எம்கேபி நகர் காவல் உதவி ஆணையராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் மன்னார்குடி டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராகப் பணியாற்றி வந்த காவ்யா மணப்பாறை டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த பார்த்திபன் திட்டக்குடி டிஎஸ்பியாகவும், சேலம் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாக இருந்த லட்சுமணன் சேலம் ரயில்வே டிஎஸ்பியாகவும் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பியாக இருந்த சி.பி. சாய் சவுந்தர்யன் மதுரை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், கன்னியாகுமரி டிஎஸ்பியாக இருந்த மகேஷ் குமார் கோவை சிபிசிஐடி டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பென்னாகரம் டிஎஸ்பியாக இருந்த சபாபதி சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸ் டிஎஸ்பியாகவும், தீவிரவாத தடுப்பு பிரிவு டிஎஸ்பிப்பாக இருந்த பண்டாரசாமி சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை திருமங்கலம் காவல் உதவி ஆணையராக இருந்த பரமானந்தன் திருச்சி விமான நிலைய பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 40 போலீஸ் டிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர்களை டிஜிபி சங்கர் ஜிவால் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பியாக இருந்த சண்முகசுந்தரம், அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டிஎஸ்பியாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சிபிஐ விசாரணை தொடங்க உள்ள நிலையில் புதிய டிஎஸ்பி நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.