"நண்பர் விஜயகாந்த் நலம்பெற வாழ்த்துகள்" - முதல்வரின் உருக்கமான பதிவு..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது உடல் நலம்பெற வாழ்த்தியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பொது கூட்டங்களிலோ, கட்சி கூட்டங்களிலோ பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மெலிந்த உடலுடன் இருக்கும் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதனிடையே அவர் சிகிச்சைக்காக பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இன்னிலையில், கடந்த ஒரு வார காலமாக விஜயகாந்தின் காலில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரது கால் விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் தேமுதிக சார்பில் கடந்த வாரம் அறிக்கை ஒன்றும் வெளியானது. அதில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகளவு கூடியிருப்பதால் விஜயகாந்தின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் விஜயகாந்தின் வலது கால்களில் இருந்த 3 விரல்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்த அறிக்கையும் வெளியானது. அதன்பின்னர் கட்சி தொண்டர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து அவருக்கு உடல் நலம் பெற தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். அவர் விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்ப விழைகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

                                                                                                           – Geetha Sathya Narayanan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk