நெல்லை:
ஒரே நாளில் நான்கு முக்கிய கொலை வழக்குகள் விசாரணைக்கு வருவதால் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தை சுற்றி துணை ஆணையர் தலைமையில் போலீஸ் குவிப்பு.
நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நாள்தோறும் கொலை கொள்ளை மோசடி போன்ற பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம். எனவே வழக்கமாக நீதிமன்ற வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் இன்று திடீரென வழக்கத்தை விட அதிகளவு போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் குவிக்கப்பட்டதால் அங்கு இன்று காலை முதல் பரபரப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக நீதிமன்றத்தை சுற்றி நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீதிமன்றத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது கடந்த ஆண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் வைத்து கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட வழக்கு ; சீவலப்பேரி கோவில் பூசாரி கொலை செய்யப்பட்ட வழக்கு ; தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் 15 ஆண்டுக்கு முன்பு ஆள் மாறாட்டத்தில் போலீஸ் எஸ்ஐ கொல்லப்பட்ட வழக்கு மற்றும் முன்னிர்பள்ளம் பகுதியில் இரு சமுதாயத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் அடுத்தடுத்து நடந்த கொலை வழக்கு என ஒரே நாளில் பல முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் இன்று விசாரணைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
அனைத்தும் பதற்றத்தை ஏற்படுத்தும் வழக்குகள் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர் குறிப்பாக அண்டை மாவட்டமான தூத்துக்குடியில் நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்துக்கு எதிரே குடும்ப பிரச்சினையில் மகனை தந்தை வெட்டி கொலை செய்தார். எனவே இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவே நெல்லையில் இந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
– Gowtham Natarajan