கன்னியாகுமரி:
இரட்டைக் கொலையில் மொத்தம் 7 பேர் தொடர்பு என தகவல்;
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு திணறி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட பகுதியில் சிசிடிவி பதிவுகள் செல்போன் டவர் சிக்னல் உட்பட நவீன முறையில் புலனாய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக மேல மணக்குடி பகுதியை சேர்ந்த இருவரை திண்டுக்கல்லில் வைத்து கைது செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைச் சம்பவத்தில் முட்டம் பகுதியை சார்ந்த மேலும் ஐந்து நபர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரட்டைக் கொலை சம்பவத்தை 7 பேர் கொண்ட கும்பல் நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே காவல்துறை தரப்பில் கஞ்சா போதை கும்பல்கள் சேர்ந்து கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். ஏற்கனவே அந்த பகுதியில் கஞ்சா போதை கும்பல் நடமாடி வந்ததும் அவர்கள் மீது பலியான பெண் கொடுத்த புகாரால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அடிப்படையாகக்கொண்டு இந்த இரட்டைக் கொலை நடந்து இருப்பதாக அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டி வந்தனர்.
அதை நிரூபிக்கும் விதமாக தற்போது மேல மணக்குடி பகுதியை சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் முட்டம் பகுதியை சார்ந்த ஐந்து பேரும் சேர்ந்து இரட்டைப் படுகொலையை நடத்தியதாகவும் கொலையை நடத்திவிட்டு மேல மணக்குடி பகுதியைச் சார்ந்தவர்கள் திண்டுக்கல்லுக்கு தப்பி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படியாயினும் ஒன்றிரண்டு நாட்களில் அனைத்து குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்து விடுவதாக கூறப்படுகிறது. போலீசார் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே காவல்துறை தரப்பில் தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் குற்றவாளிகளில் ஒரு சிலர் சம்பவ இடத்தின் அருகே நடந்து செல்வதாக கூறப்படும் சிசிடிவி பதிவுகளும் வெளியாகி உள்ளது. தனிப்படையினர் தீவிரமான தேடுதலுக்கு பின்னர் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார்கள் என்று கூறப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக கஞ்சா மற்றும் போதை ஊசி நடமாட்டம் அதிகரித்த நிலையில் புதிய எஸ்பி பதவி ஏற்ற பின்னர் கஞ்சா போதை ஊசி நடமாட்டத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொதுமக்கள் அது சம்பந்தமாக காவல்துறைக்கு ரகசியமாக தகவல் அளித்து வருவதால் பாதிக்கப்படும் கஞ்சா கும்பல்கள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. ஆகவே குமரி மாவட்டத்தில் இதுபோன்ற கஞ்சா போதை கும்பல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி அழிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.