தமிழ் நிலையானது..! மோடி அப்படி என்னதான் பேசினார்?

சென்னை:

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை புரிந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி 11 நலத்திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றினார்.

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. அவர் பேசியபோது, “தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்தது; தமிழ்நாட்டின் கலாசாரம் மக்கள், மொழி எல்லாமே இங்கு சிறப்பு வாய்ந்தவை. தமிழ்மொழி நிலையானது, நித்தியமானது, தமிழ் கலாசாரம் உலகளாவியது. சென்னை – கனடா, மதுரை – மலேசியா, நாமக்கல் – நியூயார்க், சேலம் – தென் ஆப்பிரிக்கா வரை தமிழ் கலாசாரம் உள்ளது.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என பாடினார் பாரதியார். தமிழ் மொழி பழமையானது; ஆனால் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக விளங்குகிறார். நாம் வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. செவித்திறன் குறைவுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தின் பாரம்பரிய உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்தார் அமைச்சர் எல்.முருகன். தமிழ்நாட்டில் ரூ.31,000 கோடியிலான திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. மதுரை – தேனி அகல ரயில்பாதை விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். சாலைத் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியோடு நேரடி தொடர்புடையவை. எதிர்கால தேவையை நோக்கமாகக் கொண்டு நவீனத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கலங்கரை விளக்கம் திட்டத்தின்கீழ் வீடுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். சூழலுக்கு இசைவான இல்லங்களை உருவாக்குவதில் உலக அளவிலான சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றுள்ளோம். எரிவாயு குழாய் திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகிறது. சென்னையைப் போன்று இந்தியாவின் பிற இடங்களிலும் சரக்கு முனையம் கட்டப்படும்.

இங்குள்ள பெற்றோர்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்க விரும்புகிறீர்கள். தலைசிறந்த உட்கட்டமைப்பு வசதிகளால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை அளிக்கமுடியும். உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதை தலையான நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறது இந்திய அரசு. உட்கட்டமைப்பு மீது கவனம் செலுத்துவதால் இந்தியாவின் இளைஞர்கள் பெரும் பயன்பெறுவர். சமூக கட்டமைப்புகளை மேம்படுத்துவதன்மூலம் ஏழைகளின் நலனை உறுதிசெய்ய முடியும். திட்டங்கள் அனைவரையும் சென்றுசேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீரை கொண்டுசெல்ல பணியாற்றுகிறோம்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிவேக இணைய சேவையை கொண்டுசெல்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். அதிவேக இணைய சேவை, எரிவாயு வழித்தடம், சாலை கட்டமைப்பு என புதிய பாதைகளில் வளர்ச்சிக்காக பயணிக்கிறோம். ரூ.7.5 லட்சம் கோடி மூலதன செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பு செயல்பாடுகள் வெளிப்படையாக உரிய நேரத்தில் நடைபெறுவதை உறுதிசெய்கிறோம். தேசிய கல்விக்கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். பனாரஸ் பல்கலைக்கழகம் எனது தொகுதியான வாரணாசியில் உள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையால் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

இலங்கைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர் உள்ளிட்ட அனைவருக்கும் உதவிகள் செய்யப்படும். அண்டைநாடு என்பதுடன் நட்பு நாடு என்கிற வகையில் உணவு, மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு சுகாதாரம், வீட்டுவசதி உள்ளிட்டவற்றை இந்தியா ஏற்படுத்தி கொடுத்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு சென்று திட்டங்களை தொடங்கிவைத்த இந்திய பிரதமர் நான். நாம் அனைவரும் இணைந்து இந்தியாவை வளமானதாக ஆக்குவோம் என்று பேசிய பிரதமர், வணக்கம்! மிக்க நன்றி! பாரத் மாதா கி கே, வந்தே மாதரம் என்று கூறி உரையை முடித்தார்.

                                                                                                                                         – R Mohan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com