மத்திய பிரதேசம்:
தவறான பாதையில் புகுந்து விபத்தை ஏற்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த இளம் பெண் ஒருவர், ஷூவை கழட்டி ஸ்விக்கி டெலிவரி பாயை தாக்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஸ்விக்கி, ஸொமட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப்கள் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை அளித்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்கள் கண்மூடித்தனமாக பைக்கை ஓட்டுவதும், தவறான பாதையில் புகுந்து செல்வதும் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஸ்விக்கி டெலிவரி பாய்க்கு நடந்த சம்பவம் வைரலாகியுள்ளது. இங்குள்ள ஜபல்பூர் நகரில் நேற்று வழக்கம் போல போக்குவரத்து பரபரப்பாக காணப்பட்டது. அப்போது, ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு சென்ற பெண்ணின் முன்பாக, ஸ்விக்கி டெலிவரி பாய் தவறான பாதையில் குறுக்கே வந்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பெண், கீழே விழுந்ததுடன் பைக்கிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, டெலிவரி பாயை திட்டிக்கொண்டே தனது ஷூவை கழட்டி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். நடுரோட்டில் பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள், அடிப்பதை நிறுத்துமாறு சொல்லியுள்ளனர். இதற்கு அந்தப் பெண், பாதிக்கப்பட்டவள் நான்தான். நீங்கள் இல்லை என்று கூறி தொடர்ந்து அடி வெளுத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. போலீசார் அளித்துள்ள தகவலின்படி ஸ்விக்கி டெலிவரி பாய் 25 வயதான திலீப் விஸ்வகர்மா என்று தெரியவந்துள்ளது. பீட்ஸா டெலிவரிக்காக அவர் வேகமாக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரைத் தாக்கிய மதுசிங் என்ற அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.