Night lockdown : தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு..!

சென்னை,

உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் சுனாமி வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று 4,862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கி (6,983 பேர்) பதிவாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகர் முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இரவு நேர ஊரடங்கு காரணமாக பெருங்களத்தூரில் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையத்தில் மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக ஊரடங்கு நேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான பொது / தனியார் பஸ் சேவைகள் அனுமதிக்கப்படும் என்றும்  பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வணிக நிறுவனங்கள் வியாபாரம் செய்வோர் ஆகியோர் அனைவரும் பத்து மணிக்கு முன்பாக தங்களது வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை அடைத்து விடவேண்டும் என்றும், அத்தியாவசியப் பணி, மருத்துவ உதவிகோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk