உ.பி. மக்களுக்குத் தேவை சோறா? மோட்சமா? காசி விஸ்வநாதர் எதை தரப் போகின்றார்? - செ.கார்கி.,

சில நாட்களுக்கு முன்னால் மோடி புதிதாக கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் என்று ஊடகங்கள் சங்கு ஊதின. பிரதமர் நாட்டு மக்களுக்கு நெடுஞ்சாலையை அர்ப்பணித்தார், மருத்துவமனையை அர்ப்பணித்தார், பல்கலைக்கழகத்தை அர்ப்பணித்தார் என்தெல்லாம் மாறி இப்போது கோயிலை அர்ப்பணித்தார் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறி இருக்கின்றது.

ஒரு இந்துக் கோயிலை எப்படி பிரதமர் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிக்க முடியும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

ஆனால் பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பலின் ஏவல் நாய்களாக செயல்படும் ஊடகங்களுக்கு இந்தியா என்பது இந்து நாடுதான். அந்த இந்து நாட்டின் பிரதமர் மோடிதான். அதனால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்தியை வெளியிடுவார்கள்.

கோயில்கள் கட்டுவதற்கும், சிலைகள் வைப்பதற்கும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிடும் இவர்கள் ஒருநாளும் சாமானிய மக்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை உத்திரவாதப்படுத்த எதையுமே செய்ததில்லை.

இந்தியாவில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள வறுமை தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் வரிசையில் 51.91% ஏழைகள் உள்ள பீகார் மாநிலம் முதலிடத்திலும், 42.16% ஏழைகள் உள்ள ஜார்கண்ட் மாநிலம் இரண்டாவது இடத்திலும் 37.79% ஏழைகள் உள்ள பிஜேபி ஆளும் உத்திரப் பிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 36.65% ஏழைகள் உள்ள, பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் நான்காவது இடத்திலும் 32.67% ஏழைகள் உள்ள மேகாலயா மாநிலம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஆனால் சொந்த மாநில மக்கள் வறுமையில் தவிக்கும் போது அதை தீர்க்கத் துப்பில்லாத பிஜேபி அரசு 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்புக்கு ஆலய வளாக விரிவாக்கத் திட்டத்தை தயாரித்துள்ளது. இதன் மூலம் கங்கை படித்துரை வழியாக நேரடியாக ஆலயத்திற்கு வரும் வகையில் நடைபாதை வளாகம் அமைக்கப்படவுள்ளது. இது வாரணாசி தொகுதியின் எம்.பியான பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாக கருதப்படுகின்றது.

இந்தத் திட்டத்திற்கான நில கையகப் படுத்தலுக்காக பல ஆயிரம் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றன.

தற்போது அதன் முதற்கட்டப் பணிகள் 339 கோடி ரூபாயில் முடிக்கப்பட்டு, 23 கட்டிடங்களை உள்ளடக்கிய காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ‘அர்ப்பணித்துள்ளார்’.

பிரதமர் மோடியின் மற்றொரு இந்துத்துவ கனவு திட்டமான காசி – விஸ்வநாதர் சாலைத் திட்டத்திற்காக ஏற்கெனவே 249 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் மத்திய மோடி அரசு வாரணாசியை ஆன்மீக தலத்திலிருந்து சுற்றுலாத் தலமாக மாற்றுவதை எதிர்த்து ஏற்கெனவே பல இந்து அமைப்புகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது அந்தப் பகுதியில் வாழும் சாமானிய இந்து மக்கள்தான்.

மதவெறி, சாதிவெறி, ஊட்டச்சத்துக் குறைபாடு என்று அனைத்துமே உபியில் நிறுவன மயமாக்கப்பட்டு நிரந்தரமாகி இருக்கின்றது.

2017-க்கான மனிதவள வளர்ச்சி அட்டவணையில் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசமும் பீஹாரும் மிக மோசமான செயல்பாட்டுக்காக இறுதியில் இடம்பெற்றன. கடந்த 27 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசம் தனது மனிதவளக் குறியீட்டு அட்டவணையை மேம்படுத்தவே இல்லை என்பதை ‘ஸ்டேட் வங்கி’யின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

புள்ளியியல் – திட்ட அட்டவணைத் துறை, கல்வி பற்றிய அறிக்கைத் தயாரிப்பில் ‘குடும்பங்களின் சமூக நுகர்வு’ என்ற தலைப்பிலும், நிதி ஆயோக் அமைப்பு ‘பள்ளிக் கல்வித்தர அட்டவணை’ என்ற தலைப்பிலும், பெண் கல்வியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலம் கேரளம் என்றும், மிக மோசமாகச் செயல்பட்ட மாநிலம் உத்தரப் பிரதேசம் என்றும் ஆய்வு செய்து தெரிவித்துள்ளன.

சட்டம் ஒழுங்கின்மை, கொள்ளை, இந்துமதவெறி, சாதிக் கொலைகள், பாலியல் சார்ந்த கொடூரச் சம்பவங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத நிலை, கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையார்கள் அடிமைப்படுத்திச் சுரண்டுவது என்று அனைத்துமே உபியின் அடையாளமாக மாறியிருக்கின்றன. அதன் ஏழைகளில் ஒரு பகுதியினர் இடம்பெயரும் தொழிலாளர்களாக மாநிலத்தின் நகர்ப் பகுதிகளுக்கோ, பிற மாநிலங்களுக்கோ வேலை தேடிச் செல்கின்றனர்.

உத்தரப் பிரதேசமானாலும் வெளி மாநிலமானாலும் – நல்ல உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதி, சுகாதாரமான சுற்றுப்புறம், கல்வி, வேலைக்கேற்ற நியாயமான ஊதியம் என்று எதுவுமே இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சபிக்கப் பட்டவர்களாகவும் – போகும் இடங்களில் எல்லாம் உத்தரப் பிரதேச ஏழைகள் வாழ்கின்றனர்.

தேசிய குற்றச் செயல் பதிவேட்டு முகமை வெளியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் பதிவான மொத்த குற்றச் செயல்களில் 10% – சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் – உத்தரப் பிரதேசத்தில்தான் பதிவாகின்றன. மகளிருக்கு எதிரான குற்றங்களில் இந்த மாநிலத்தில் நடந்தவை மட்டும் 56,011. எல்லா மாநிலங்களிலும் சேர்த்து 3,59,849 ஆகும்.

ஆனால் மாநிலத்தை ஆளும் யோகியின் அரசு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து மாநிலத்தை மதவெறியிலும், சாதிவெறியிலும், மூட நம்பிக்கையிலும் மூழ்கடித்து அந்த மக்களை முட்டாள்களாக மாற்றி தொடர்ந்து தன் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தால் உபியின் சாமானிய மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக பல நூறு ஆண்டுகளாக இந்து மக்களை ஆன்மா, மோட்சம் என ஏமாற்றி வயிறு வளர்த்த பார்ப்பன கும்பலுக்கே பெரிதும் பயன்படப் போகின்றது.

உலகிலேயே மிக மாசடைந்த ஆறாக கங்கையும், உலகிலேயே மிக மாசடைந்த மனம் படைத்த கும்பலாக பார்ப்பனர்களும் உள்ளார்கள். தற்போது இந்த இரண்டுக்கும் இடையே காசியில் ஒரு வலுவான பிணைப்பை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

இந்த உலக வாழ்கையை மோடி கும்பல் நரகமாக மாற்றி இருக்கலாம். ஆனால் காசிக்கு போய் கங்கையில் மூழ்கி பார்ப்பனனிடம் ஆசி வாங்கினால் நாளை உங்களுக்கு மோட்சம் கிடைக்கும். அதனால் நாளை கிடைக்கப் போகும் அந்த மோட்சத்திற்காக இன்று வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும், பாலியல் வன்முறைகளையும், மதவெறியையும், சாதி வெறியையும் சகித்துக் கொண்டு வரும் தேர்தலில் பிஜேபிக்கு உபி மக்கள் வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் நரகத்துக்குப் போகும் வாய்ப்பைத் தவிர மோடி ஆட்சியில் நமக்கு வாய்ப்பு எதுவுமில்லை.

– செ.கார்கி

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com