யார் எவ்வளவு கூட்டம் கூட்டினாலும் வெற்றியென்னவோ திமுகவுக்கே!” - நாளை தொடங்கும் சமத்துவ நடைப்பயணம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் விளாசல்!
தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கத் துடிக்கும் சக்திகளை முறியடிக்கவே ‘சமத்துவ நடைப்பயணத்தை’ மேற்கொள்கிறோம் என்றும், திமுக கூட்டணியில் கண்ணியம் காப்பதில் தாங்கள் ஒருபோதும் ‘லட்சுமண ரேகையை’ தாண்டமாட்டோம் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டுத் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மதிமுகவின் அதிகாரப்பூர்வப் பிரச்சாரத் தொடக்கமாக இந்த நடைப்பயணம் அமையும் என்றார். நாளை திருச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும் இந்த நடைப்பயணம், 10 நாட்களில் மதுரையில் நிறைவு பெறவுள்ளது. அரசியல் கூட்டணி, வடமாநில தொழிலாளர் விவகாரம் மற்றும் சாகித்ய அகாடமி விருது தொடர்பான மத்திய அரசின் புதிய நடைமுறை எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து வைகோ தனது பாணியில் காரசாரமான கருத்துகளைப் பதிவு செய்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டில் இந்துத்துவ சக்திகள் சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கத் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகின்றனர்; அதைத் தடுக்க வேண்டியது எங்களின் கடமை. அதற்காகவே நாளை திருச்சியில் சமத்துவ நடைப்பயணத்தைத் தொடங்குகிறோம்” என்றார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், அடுத்த 10 நாட்களில் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று மதுரையில் இந்தத் தேர்தல் பிரச்சாரப் பயணம் நிறைவடையும் என அவர் விவரித்தார். இந்த நடைப்பயணத்தின் போது திமுக அரசின் சாதனைகளையும், அதற்கு ஆதரவாகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய உள்ளதாக வைகோ குறிப்பிட்டார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்; இருப்பினும் திருத்தணியில் நடந்த சம்பவம் தமிழகத்திற்கு ஒரு அவமானத்தையே தேடித்தந்துள்ளது. இனி இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார். மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை உருவாக்கி வரும் போதிலும், அதையெல்லாம் திறம்படச் சமாளித்து முதலமைச்சர் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
கூட்டணி விவகாரத்தில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்திய வைகோ, “கூட்டணி தர்மத்தைப் பேணுவதில் எங்களுக்கு ஒரு ‘லட்சுமண ரேகை’ உண்டு; அதைத் தாண்டும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது. கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் எவ்விதக் கருத்தையும் நாங்கள் கூற மாட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சாகித்ய அகாடமி விருது வழங்குவதில் இனி மத்திய அரசே முடிவெடுக்கும் என்ற புதிய அறிவிப்புக்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்த அவர், “தமிழகத்தில் யார் எவ்வளவு பெரிய கூட்டம் கூட்டிக் காட்டினாலும், வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிதான் நிச்சயமாக வெற்றி பெறும்” என விஜய் உள்ளிட்ட மாற்று அரசியல் சக்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி தனது பேட்டியை நிறைவு செய்தார்.
