பத்தாண்டுகளாகப் பணியாற்றிய நிர்வாகிகள் புறக்கணிப்பு; திருப்பூர் மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தில் வெடித்த உட்கட்சி மோதல்!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அலுவலகத் திறப்பு விழாவின் போது, கட்சிக்காகப் பத்தாண்டுகளாக உழைத்தவர்களுக்குப் பதவி வழங்கப்படவில்லை எனக்கூறித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கே.ஏ. செங்கோட்டையன் காரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் ரசிகர் மன்றக் காலம் முதல் கட்சிக்காகத் தீவிரமாகப் பணியாற்றி வந்த தங்களை விடுத்து, வெளியூர்க்காரர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் இளைஞரணிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி நிர்வாகிகள் குகன்மணி, தங்கவேல் மற்றும் ரகுபதி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ‘போர்க்கொடி’ தூக்கினர். “உழைத்தவர்களுக்குக் கட்சியில் பதவி இல்லையா? இளைஞரணிப் பொறுப்பைப் பெற்றுத் தாருங்கள்!” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டதால், அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அதிருப்தி அடைந்த தொண்டர்கள் விழாவைப் புறக்கணித்துச் சாலையிலேயே அமர்ந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கட்சி அலுவலகத் திறப்பு விழா இன்று கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவிற்குத் தவெக-வின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமை தாங்கி அலுவலகத்தைத் திறந்து வைக்க வருகை தந்தார். அவர் நிகழ்ச்சி இடத்திற்கு வந்தபோது, ஏற்கனவே அங்கு காத்திருந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திடீரென அவரது காரைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வெள்ளக்கோவில் இளைஞரணி நிர்வாகி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அவர்கள் ஆவேசமாகக் குற்றம் சாட்டினர்.
ரசிகர் மன்றக் காலம் தொட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் களத்தில் நின்று பணியாற்றி வரும் குகன்மணி, தங்கவேல், ரகுபதி போன்றவர்களுக்குப் பதவி வழங்காமல், பிரவீன் என்பவருக்கு இளைஞரணிப் பொறுப்பு வழங்கப்பட்டதே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. “வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் பதவி வழங்குவதா? பல ஆண்டுகளாக உழைத்த எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?” எனத் தொண்டர்கள் கே.ஏ. செங்கோட்டையனிடம் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மைக் இன்றித் தொண்டர்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தியதால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. பதாகைகளை ஏந்தி நின்ற தொண்டர்களை முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றும் பலனளிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், “உங்களது கோரிக்கைகள் குறித்துத் தலைமைக்குத் தெரிவிக்கப்படும்; இது தொடர்பாகத் தனியாகப் பேசி விரைவில் தீர்வு காணப்படும்” என உறுதியளித்தார். இருப்பினும், சமாதானத்தை ஏற்க மறுத்த அதிருப்தி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்குள் செல்லாமல் திறப்பு விழா நிகழ்ச்சியை முற்றிலுமாகப் புறக்கணித்தனர். கட்சி ஆரம்பித்த சில காலத்திலேயே, பல மாவட்டங்களில் உழைத்த தொண்டர்களுக்கும் புதிய நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி வருவது தமிழக வெற்றிக் கழகத் தலைமைக்கு ஒரு சவாலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலை நோக்கித் தீவிரமாகத் தயாராகி வரும் வேளையில், வெள்ளக்கோவிலில் வெடித்துள்ள இந்தப் பதவிப் போட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
