கொடூரத்திற்குத் துணை போன 18 வயது மகன் - கொண்டப்பநாயக்கன்பட்டியில் அதிர வைத்த 'ஹானர் கிளிங்' பாணி கொலை!
சேலம்: மாம்பழ நகரமான சேலத்தின் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில், சினிமா படப் பாணியில் அரங்கேறியுள்ள ஒரு கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உறைய வைத்துள்ளது. தனது நடத்தையை மாற்றிக் கொள்ளாமல் 5 பேருடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியைக் கணவனே ஆத்திரத்தில் கொன்று எரித்து, உடலை வீட்டின் அருகிலேயே ரகசியமாகப் புதைத்த 'திடுக்கிடும்' தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 'க்ரிமினல்' காரியத்திற்குத் துணை நின்ற 18 வயது மகன் மற்றும் உறவினர் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகத் தூக்கியுள்ளனர்.
சங்ககிரி கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி தவசியப்பனுக்கும், கனகவல்லிக்கும் 22 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஏற்கனவே ஒருவரைப் பிரிந்து தவசியப்பனை இரண்டாவதாகக் கரம்பிடித்த கனகவல்லிக்கு, 20 வயதில் மகளும் 18 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கனகவல்லிக்கு சங்ககிரியில் வேலை பார்த்த செந்தில் உட்பட 5 பேருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் கேட்காததால், ஆத்திரமடைந்த கணவர் தவசியப்பன் மனைவியைத் தீர்த்துக்கட்ட 'மாஸ்டர் பிளான்' போட்டுள்ளார்.
கடந்த 13-ம் தேதி பொங்கல் கொண்டாடச் சேலத்திற்கு வந்த கனகவல்லியை, கடந்த 16-ம் தேதி முதல் காணவில்லை என அவரது அக்கா ராசாத்தி போலீசில் 'கம்ப்ளைன்ட்' தட்டியுள்ளார். விசாரணையின் போது கனகவல்லியின் மகனும், உறவினரான மணிகண்டனும் போதையில் உளறியது போலீசாருக்குப் பெரும் 'க்ளூ'வாக அமைந்தது. அவர்களிடம் நடத்திய 'கிடுக்கிப்பிடி' விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தால் கனகவல்லியை அடித்துக் கொன்று, உடலை எரியூட்டி எஞ்சிய பாகங்களை வீட்டின் அருகிலேயே குழி தோண்டிப் புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.
'ஸ்பாட்'டுக்கு விரைந்த கன்னங்குறிச்சி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் கணவர் தவசியப்பன், தனது தாயைக் கொல்ல உடந்தையாக இருந்த 18 வயது மகன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரையும் போலீசார் 'லாக்' செய்துள்ளனர். குடும்ப மானத்தைக் காக்க மனைவியையே கொன்று மகன் முன்னிலையிலேயே புதைத்த இந்த 'ஆக்ரோஷ' சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
