60-களின் புரட்சித் தீ! - திரையரங்குகளில் ‘பராசக்தி’ கொண்டாட்டம்; ரசிகர்களின் கருத்து என்ன?
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான ‘பராசக்தி’, தணிக்கைச் சிக்கல்களைக் கடந்து இன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க 1960-களின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான இந்தப் படத்தைக் கொண்டாடக் காலை 9 மணிக்கே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு திரண்டனர். சென்சார் சான்றிதழ் பெறுவதில் கடைசி நிமிடம் வரை நீடித்த இழுபறிக்குப் பிறகு, நேற்று நண்பகல் சான்றிதழ் கிடைத்ததை அடுத்து, இன்று காலை முதல் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.
‘புறநானூறு’ என்ற பெயரில் மாணவர் புரட்சிப் படையை நடத்தி வரும் சிவகார்த்திகேயன், இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கும் தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு ரயில் மறியல் போராட்டத்தின் போது ஏற்படும் மோதலில் ரவி மோகனின் விரல் பறிபோக, தனது நண்பனையும் இழக்கும் சிவகார்த்திகேயன் போராட்டத்தைக் கைவிட்டு ஒதுங்குகிறார். ஆனால், பல ஆண்டுகள் கழித்துத் தம்பி அதர்வா மீண்டும் போராட்டக் களத்தில் குதிக்க, பழைய பகையுடன் ரவி மோகன் பழிவாங்கத் துடிக்கிறார். இந்தச் சிக்கல்களுக்கு இடையே, இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசு வேலை பறிபோகும் ஒரு சாமானியனின் வலியோடு சிவகார்த்திகேயன் மீண்டும் எப்படிப் புரட்சி செய்கிறார் என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
இதுவரை காமெடி மற்றும் காதல் படங்களில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் ஒரு போராளியாக விஸ்வரூபம் எடுத்துள்ளார்; அவரது சாட்டையடி வசனங்கள் திரையரங்குகளில் கைதட்டல்களை அள்ளுகின்றன. வில்லனாக அறிமுகமாகியுள்ள ரவி மோகனின் மிரட்டலான பார்வையும், அதர்வாவின் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன. ஸ்ரீலீலா தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-வது படமான இதில், பாடல்களும் பின்னணி இசையும் கதையின் தீவிரத்தைக் கூட்டுகின்றன. ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 60-களின் தமிழகத்தை நம் கண்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சுதா கொங்கராவின் வலுவான திரைக்கதை ‘பராசக்தி’யை ஒரு மாபெரும் வெற்றியாக மாற்றியுள்ளது.
.jpg)