கிண்டியில் புதிய பேருந்து நிழற்குடைகள் திறப்பு; 2026-இல் சைதாப்பேட்டை இரும்பு மேம்பாலம் தயார் - மா.சு அதிரடி!
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் ஆளுங்கட்சிக்கு இடையேயான வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை எதிரே, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட இரண்டு புதிய நவீன பேருந்து நிழற்குடைகளை அமைச்சர் இன்று மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என்னை அறிவாளி இல்லை என்று விமர்சிப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது மனிதாபிமானமற்ற முறையில் ஓடி ஒளிந்த 'அறிவாளிகள்' எல்லாம் என்னைப் பற்றிப் பேசுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை" என 'வெடி'யைக் கிளப்பினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "கிண்டி கலைஞர் மருத்துவமனைக்குத் தினமும் 4 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். விரைவில் இங்குப் பிரம்மாண்டமான குழந்தைகள் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட உள்ளது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் சைதாப்பேட்டை இரும்பு மேம்பாலம் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் திறக்கப்படும்" எனப் பல 'குட் நியூஸ்'களைப் பகிர்ந்தார். எடப்பாடி பழனிசாமியின் சட்டம் ஒழுங்கு விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், அதிமுக ஆட்சிக் காலத்தோடு ஒப்பிட்டால் இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பது புரியும் என்றும், அன்புமணி ராமதாஸ் போன்றோர் பொருளாதார வல்லுநர் ப.சிதம்பரத்தின் பேட்டியைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சாடினார்.
