விஜய் குற்றவாளி அல்ல; சீமானை எளிதாக எடை போடாதீர்கள்! 4 முனைப் போட்டியில் ஸ்ட்ராங் கூட்டணி அமைய அண்ணாமலை அழைப்பு!
என்னை மும்பையில் கால் வைக்க விடமாட்டோம் என்றும், காலை வெட்டுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். சஞ்சய் ராவத் போன்றவர்கள் மராத்தியர்கள் பெயரைச் சொல்லி வாந்தி எடுக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன், முடிந்தால் என் காலை வெட்டிப் பார் எனத் தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ திரைப்பட விவகாரங்கள், சிபிஐ வளையத்தில் விஜய், மற்றும் 2026 தேர்தல் வியூகங்கள் குறித்து அதிரடி ‘பஞ்ச்’ வசனங்களுடன் பேட்டியளித்தார். குறிப்பாக, தன்னைக் குறிவைக்கும் மராட்டிய அரசியல் தலைவர்களுக்குப் பதிலடி கொடுத்ததோடு, தமிழக அரசியலில் உருவாகியுள்ள 4 முனைப் போட்டி குறித்தும் தனது அரசியல் கணக்குகளைப் பகிர்ந்துகொண்டார்.
பராசக்தி படம் முரசொலி போல் களத்தில் இருக்கும் என்று கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார். அதில் காங்கிரஸின் துரோகம் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது. 1965-ல் இந்தி திணிப்பு மூலம் காங்கிரஸ் செய்த அடாவடித்தனத்தைத் திரைக்கதை புட்டுப் புட்டு வைக்கிறது. திமுக என்ற வீட்டில் அந்தத் தீயைப் பற்ற வைப்போம்” எனத் தனது பேட்டியைத் தொடங்கினார் அண்ணாமலை. ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்தும், “அந்தப் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரு படத்தை முழுமையாகப் பார்க்காமல் தடை கேட்பது தவறு. விரைவில் ஜனநாயகன் திரைக்கு வர வேண்டும்” எனத் தனது ஆதரவைப் பதிவு செய்தார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சிபிஐ முன் ஆஜரானது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், “சம்மன் வழங்கப்படுவதால் மட்டுமே ஒருவரைச் சந்தேகப் பேர்வழியாகவோ, குற்றவாளியாகவோ கருதிவிட முடியாது. இதில் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை” எனத் தந்திரமாக மழுப்பினார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், “இது ஒரு வித்தியாசமான தேர்தல். திமுக, அதிமுக-பாஜக கூட்டணி, சீமான், விஜய் என 4 முனைப் போட்டி பலமாக இருக்கும். கொள்கைக்காகத் தனித்து நிற்கும் சீமானையோ, ஸ்ட்ராங்காகக் களமிறங்கியுள்ள விஜயையோ யாரும் எளிதாக எடை போட வேண்டாம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்து உள்ளவர்கள் அனைவரும் இணைய வேண்டும். இந்தப் போட்டியில் ஒரு ஓட்டு கூட மிக முக்கியம்” என்றார். “இந்தத் தேர்தலில் நான் கோச் (Coach) இல்லை, கேப்டனும் (Captain) இல்லை; வெறும் பார்வையாளர் தான். கேப்டன்கள் டெல்லியில் இருக்கிறார்கள், அவர்கள் முடிவெடுப்பார்கள்” என அடக்கத்துடன் கூறிவிட்டு, அதே சமயம் “மும்பை மிரட்டல்களுக்கெல்லாம் ஒரு விவசாயி மகன் பயப்படமாட்டான்” என வீர வசனம் பேசி விடைபெற்றார்.
