32 கோடியில் புனரமைப்பு; தமிழரின் இசைக்கருவிகள் முதல் அரிய புகைப்படங்கள் வரை - கண்டு வியந்த பொதுமக்கள்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ஆம் தேதி, சுமார் 32.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இந்த அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சென்னை மட்டுமின்றி புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக மக்கள் இந்த அரங்கிற்குத் திரண்டு வருகின்றனர். உட்புறக் கட்டுமானங்கள் மற்றும் கலைநயமிக்க வேலைப்பாடுகள் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இங்கு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
இங்கு நுழைந்தவுடன் ஒரு 'டைம் ட்ராவல்' (Time Travel) செய்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது எனப் பார்வையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். குறிப்பாகத் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது. பழைய புகைப்படங்கள், முன்னோர்கள் பயன்படுத்திய அரிய பொருட்கள் என வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த அரங்கம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு சிறந்த கல்வித் தளமாக விளங்குவதாகப் பெற்றோர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். சென்னையின் அடையாளமாகத் திகழும் இந்த விக்டோரியா அரங்கம், இனி வரும் காலங்களில் கலை மேடைகள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளின் சங்கமமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
