கோவை: கோயம்புத்தூரில் மதுபோதையில் அரசு சொகுசு பேருந்தில் ஏறிய நபர் ஒருவர், பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என அடம் பிடித்து நடத்துனரைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை சோமனூர் நோக்கி தடம் எண் 90 கொண்ட அரசு சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் நபர் ஒருவர் அதிகளவு மது அருந்திய நிலையில் ஏறியுள்ளார்.
பேருந்து லட்சுமி மில் சிக்னலைத் தாண்டிச் சென்றபோது, அந்த நபர் அடுத்த நிறுத்தமான எஸ்.எஸ். பங்க் பகுதியில் பேருந்தை நிறுத்தும்படி நடத்துனரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்தப் பேருந்து குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் 'லிமிடெட் ஸ்டாப்' சொகுசுப் பேருந்து என்பதால், அந்த இடத்தில் நிறுத்த முடியாது என நடத்துனர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் போதை ஆசாமி, நடத்துனரைத் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து, ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தினார். அப்போது அந்த நபர் பேருந்தில் இருந்து இறங்க மறுத்ததோடு, நடத்துனரை ஒருமையில் பேசி அவரைத் தாக்கத் தொடங்கினார். இருவருக்கும் இடையே பேருந்திலேயே கைகலப்பு ஏற்பட்டது.
பேருந்திற்குள் நடந்த இந்த அத்துமீறல்களை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். அதில் அந்த நபர் சட்டையைப் பிடித்து நடத்துனரைத் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, அரசுப் பணியில் இருந்த நடத்துனரைத் தாக்கிய அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
