ஆதார் மையத்தில் 'பயோமெட்ரிக்' கோளாறு: மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அவதி!

பள்ளி ஆசிரியர்கள் கெடுபிடி - இயந்திரம் பழுது எனத் திருப்பி அனுப்பும் அதிகாரிகள்: விடுமுறை நாளில் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்!


சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்தில், பயோமெட்ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக ஆதார் திருத்தப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அவசியமான ‘அப்டேட்’ - அதிகாரிகளின் அலட்சியம்?

15 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் தங்களது ஆதார் அட்டையில் கட்டாயமாகப் பயோமெட்ரிக் (கண் மற்றும் கைரேகை) தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி இந்தப் பணிகளை முடிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் தங்களது பெற்றோருடன் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக ஆதார் மையத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், அங்குள்ள பயோமெட்ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளதைக் காரணம் காட்டி, அதிகாரிகள் மாணவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை:

"காலை முதலே வரிசையில் காத்திருந்தும், இயந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறி திருப்பி அனுப்புகிறார்கள். விடுமுறை முடிந்து பள்ளி திறந்தால் எங்களால் வர முடியாது. ஆசிரியர்கள் உடனடியாக ஆதார் அப்டேட் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். மாவட்ட நிர்வாகம் தலையிட்டுப் பழுதடைந்த இயந்திரத்தை மாற்றி, புதிய இயந்திரத்தை வழங்க வேண்டும்" எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இத்தகைய நிலை நீடிப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி, கூடுதல் பணியாளர்களை நியமித்து இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk