"இந்து பண்டிகைகளை ஏன் புறக்கணிக்கிறார் முதல்வர்?" - நெல்லை கிறிஸ்துமஸ் விழா உரையைச் சாடிய வானதி.
நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை, அவரது 'வாக்கு வங்கி' அரசியலையும், இந்து மதத்தின் மீதான பாரபட்சத்தையும் அப்பட்டமாகக் காட்டியுள்ளதாகப் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 20) நெல்லையில் பேசிய முதலமைச்சர், "மதத்தின் பெயரில் உணர்வுகளைத் தூண்டுபவர்களைச் சந்தேகப்படுங்கள்" என்று பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்று குறிப்பிட்ட வானதி சீனிவாசன், "மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுகவின் நீண்டகால வரலாறு. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூடச் சொல்வதில்லை. இதுதான் அவர் சொல்லும் சமத்துவமா? வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முருகப் பெருமானின் தைப்பூசத் திருவிழா வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் தயாரா?" எனச் சவால் விடுத்துள்ளார்.
கோவில் திருப்பணிகள் குறித்து முதலமைச்சர் பேசியதற்குப் பதிலளித்த அவர், "இந்து கோவில்களுக்குத் திருப்பணி செய்வது திமுக அரசு அல்ல; அது இந்துக்கள் செலுத்தும் காணிக்கையில் நடக்கிறது. கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய அனுமதி கேட்டால் கூட லஞ்சம் கேட்கும் அவலமே நிலவுகிறது. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனைச் செயல்படுத்தாமல் அராஜகம் செய்ததுதான் திமுகவின் மதச்சார்பின்மையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்துப் பேசிய முதலமைச்சர், "சிறுபான்மையினரின் வாக்குகளை திமுகவினர் சேர்ப்பார்கள்" என்று கூறியிருப்பது, போலி வாக்காளர்களைச் சேர்த்து வெற்றி பெறலாம் என்கிற மிரட்டல் தொணியில் இருப்பதாகவும், இது தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்றும் அவர் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
