"முருகன் தமிழ் கடவுள்; சுப்பிரமணியன் அல்ல" - எச்.ராஜாவுக்குத் திருமாவளவன் பதிலடி!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவருமே பாரதிய ஜனதா கட்சியின் மறைமுகத் திட்டத்தினால் உருவானவர்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மத ரீதியான பதற்றத்தை உருவாக்க முயலும் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைக் கண்டித்து, விசிக சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில் விஜய் மற்றும் சீமானை ஒருசேர விமர்சித்தார். சீமானும் விஜயும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. அவர்கள் இருவரின் அரசியலும் தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகளைப் பிளவுபடுத்தவே முயல்கின்றன.
திமுகவை வீழ்த்துவது மட்டும்தான் ஒருவரின் இலக்கு என்றால், அவர் மக்களுக்காகக் கட்சி தொடங்கவில்லை; ஆர்எஸ்எஸ்-ன் தேவைக்காகவே கட்சி தொடங்கியிருக்கிறார். அரசியல் புரிதல் இல்லாமல் விஜய் பேசுகிறார். பிராமண கடப்பாரை கொண்டு பெரியாரை இடிப்பேன் என்று பேசுபவர்கள் யாரை திருப்திப்படுத்த முயல்கிறார்கள் என்பது புரிகிறது.
தான் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்றபோது திருநீறு அணிந்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அவர் பதிலடி தந்தார், நான் முருகனைத் தரிசித்துவிட்டு வரும்போது பூசிய திருநீற்றை வைத்து அரசியல் செய்தார்கள். அந்த இடத்தின் மரபுக்கு நான் மரியாதை செய்தேன். ஆனால், அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனும் இந்துக்களின் உண்மையான துரோகிகள். அவர்கள் விரும்புவது 'இந்து ராஷ்டிரம்' அல்ல, அது ஒரு 'பார்ப்பன ராஷ்டிரம்'. தமிழ் கடவுளான முருகனை சுப்பிரமணியன் என மாற்றி, அவரைப் பார்ப்பனர்களுக்குத் தொண்டு செய்பவராகச் சித்தரிக்கிறார்கள்.
விசிகவின் அரசியல் பாதை குறித்தும், திமுக கூட்டணி குறித்தும் அவர் உறுதிபடக் கூறினார். பதவி ஆசை இல்லை: திருமாவளவனுக்குப் பதவி ஆசை இருந்திருந்தால் விஜய்யின் பின்னால் போயிருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரை சீட் முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம். பாமகவின் ஒரு பிரிவு திமுக கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் அதனை ஏற்க மாட்டோம். சனாதனத்தை ஒழிக்கவே நாங்கள் திமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.
நாடு முழுவதும் 175 மசூதிகள் மற்றும் தர்காக்களை இடிக்கச் சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் என்றும் குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் சமூக நீதியையும் மத நல்லிணக்கத்தையும் காக்க விசிக தொடர்ந்து முன்னின்று போராடும் எனத் தெரிவித்துத் தனது உரையை நிறைவு செய்தார்.
.jpg)