"அமளியை வெளியே வையுங்கள்; அவையில் வேண்டாம்!" உலகின் வேகமான பொருளாதாரமே இந்தியாவின் அடையாளம் என பெருமிதம்!
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைச் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் அவர்கள் ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்க முயல்வதாகவும் வெளிப்படையாகச் சாடினார். மேலும், இந்தக் கூட்டத்தொடர் ஒரு வழக்கமான சடங்கல்ல, இது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையை வகுக்கும் முக்கியமான அமர்வு என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உருவெடுத்துள்ளதாகவும், இதுவே நாட்டின் பெருமைமிகு அடையாளம் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பிஹார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகம் வலுப்பெறுவதற்கு ஓர் அடையாளம் என்றும், அங்கு பெண்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளை நோக்கிக் கடும் எச்சரிக்கையை விடுத்த பிரதமர், "பிஹார் தேர்தல் தோல்வியை மனதில் கொண்டு நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பக் கூடாது. அமளியை வெளியே வைத்துக்கொள்ளுங்கள், அவையின் உள்ளே வேண்டாம்" என்று அறிவுறுத்தல் விடுத்தார். மேலும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அதிகமாகப் பேச வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
