நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசுக்கு எதிராகத் தன்னுயிர் ஈந்த பூர்ண சந்திரன்: மதுரையில் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!
மதுரை: கோவில் நகரமான மதுரையில் இன்று அரங்கேறிய ஒரு கொடூரமான துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றத் தமிழக அரசு அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மதுரையைச் சேர்ந்த முருக பக்தர் பூர்ண சந்திரன் என்பவர் மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள ஈ.வெ.ரா சிலை முன்பாகத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவி, ஆன்மீக அன்பர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஆற்றொணா வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவிற்கு எதிராகத் தமிழக அரசு பிடிவாதமாக மேல்முறையீடு செய்ததே இந்தத் தீவிர முடிவுக்கும், ஒரு விலைமதிப்பற்ற உயிரின் இழப்பிற்கும் காரணமாக அமைந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மதுரை நரிமேடு, மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த 40 வயதுடைய பூர்ண சந்திரன், மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தார். தீவிர முருக பக்தரான இவர், தனது இஷ்ட தெய்வத்தின் மலையில் தீபம் ஏற்ற விடாமல் அரசு முட்டுக்கட்டை போடுவதைக் கண்டு கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, எவரும் எதிர்பாராத விதமாக இன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பகிரங்கமாகத் தீக்குளித்துத் தனது ஆவேசமான எதிர்ப்பைப் பதிவு செய்தார். உயிருக்குப் போராடிய அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், உடல் கருகிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மதுரை மாநகர் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர் பூர்ண சந்திரனின் உயிரிழப்புக்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசின் பிடிவாதத்தால் ஒரு உயிர் பறிபோயிருப்பது அதிர்ச்சியளிக்கிறது" எனக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் இது போன்ற தற்கொலை முடிவுகளை எவரும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் உள்ள பாஜக நிர்வாகிகள் பூர்ண சந்திரனின் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு ஆன்மீக விவகாரத்தில் அரசு காட்டிய பிடிவாதம், ஒரு குடும்பத்தின் விளக்கை அணைத்துவிட்டதாக மதுரையில் உள்ள முருக பக்தர்கள் கண்ணீர் மல்கக் கூறி வருகின்றனர்.
