இண்டிகோ ஏர்லைன்ஸ் இறுதி விளக்க அறிக்கை தரவில்லை! – மத்திய விமானப் போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் குற்றச்சாட்டு! Indigo Airlines Fails to Submit Final Explanation Report After Service Disruption.

சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்குத் திரும்புதல்: 10% விமான அட்டவணையைக் குறைக்க அறிவுறுத்தல்.


இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானச் சேவையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் குளறுபடிகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை துணைச் செயலாளர் அம்புஜ் சர்மா இன்று சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தும், அவர்கள் இன்னும் இறுதி விளக்க அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்தார். அவருடன் சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் இணைந்து ஆய்வில் பங்கேற்றார்.

துணைச் செயலாளர் அம்புஜ் சர்மா பேட்டி:

இண்டிகோ ஏர்லைன்ஸ் விவகாரம் கடந்த 9 நாட்களாக நடந்தது. இதனால் பயணிகள், விமானச் சேவைகள், பயணிகளின் உடைமைகளைத் திரும்பப் பெறுதல் போன்ற சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்தேன். விமான நிலைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் ஆய்வு செய்ததில், கடந்த 5-ஆம் தேதிதான் விமானச் சேவைகளில் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. அன்று 186 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அவர் மேலும், அரசாங்கத்தால் இணையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், கூடுதல் திறனைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று பிற விமான நிறுவனங்களிடம் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்தார். "இந்தப் பிரச்சினையை ஒரே நாளில் தீர்க்க முடியாது. அது மேம்பட்டு வருகிறது. இயல்புநிலை திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.

இந்தியா முழுவதும் ரூ.1500 கோடிக்கு மேல் பணத்தைத் திரும்ப இண்டிகோ நிறுவனம் வழங்கப்பட்டு வருகிறது. பயணிகள் உடமைகளில் 1060 வழங்கப்பட்டுவிட்டன. மேலும் 44 பயணிகளுக்கு உடமைகள் வழங்கப்பட உள்ளன. இதில் 18 பயணிகளின் விவரங்கள் முழுமையாக இல்லாததால் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை உரியவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குக் குளறுபடி தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இறுதி அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இண்டிகோ நிறுவனம் தங்கள் விமான அட்டவணையை 10 சதவீதம் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும், நிறுவனங்களைத் தொடங்க முன் வந்தால் அரசு உதவத் தயாராக உள்ளது என்றும், விமான நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்துதான் விதிமுறைகளை அரசு உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

சென்னை விமான நிலையத்தின் விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர் கூறுகையில்:

"கடந்த 1-ஆம் தேதி 4 விமானங்கள் தான் ரத்து ஆனது. 173 விமானச் சேவைகள் தாமதம் காரணமாக விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 5-ஆம் தேதிதான் அதிகமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிக அளவில் கூடிவிட்டனர். டெல்லி செல்லக்கூடிய பயணிகள் ஏர்-இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பின்னர் விமான ரத்துகள் குறைந்து விட்டது."

1-ஆம் தேதி 67 ஆயிரமாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 5-ஆம் தேதி 36 ஆயிரமாகக் குறைந்திருந்தது. தற்போது பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, 9-ஆம் தேதி 53 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தற்போது விமானச் சேவைகள் இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றன. முனையங்களை மேம்படுத்தி பயணிகள் வசதிகளைச் செய்து வருகிறோம் என்றும், விமான நிலையத்தில் உதவி எண்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk