சுத்தமான காற்றை வழங்க முடியாவிட்டால் வரியையாவது குறைங்கள் - நீதிபதிகள் கருத்து!
டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்றின் தரம் நாளுக்கு நாள் அபாயகரமான நிலையை எட்டி வருகிறது. மாசடைந்த காற்றால் பொதுமக்களுக்குச் சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் காற்று சுத்திகரிப்பான் இயந்திரங்களின் (Air Purifier) தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த இயந்திரங்கள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க உத்தரவிடக் கோரி கபில் மதன் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது அறிக்கையில் காற்று மாசு அதிகமாக இருப்பதால், இந்த இயந்திரங்கள் மீதான வரியை நீக்கவோ அல்லது குறைக்கவோ பரிந்துரைத்துள்ளது" என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தற்போதைய சூழலில் ஜிஎஸ்டி கவுன்சில் உடனடியாகக் கூடி இது குறித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
விசாரணையின் போது நீதிபதிகள் சில முக்கியக் கருத்துகளை முன்வைத்தனர். "மக்களுக்குச் சுத்தமான காற்றை அதிகாரிகளால் வழங்க முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் அதைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் கருவிக்கான வரியையாவது குறைக்க வேண்டும்" என்று சுட்டிக்காட்டினர். மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை டெல்லி வாசிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
