2 நாள் பயணமாகப் புதுச்சேரி செல்லும் நிதின் நபீன்; தமிழக பாஜகவின் பிரம்மாண்ட வாகனப் பேரணி!
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிதின் நபீன், தனது முதல் பயணமாக இன்று சென்னை வருகை தந்தார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக பாஜக தனது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், தேசிய செயல் தலைவரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையம் வந்திறங்கிய நிதின் நபீனுக்கு, தமிழக பாஜக சார்பில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி அவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து கட்சி நிர்வாகிகள் புடைசூழ பிரம்மாண்ட வாகனப் பேரணியாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி பாஜகவின் இளவயது தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்ற நிதின் நபீன், தனது முதல் அதிகாரப்பூர்வப் பயணத்திலேயே தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின், அவர் சாலை மார்க்கமாகப் புதுச்சேரிக்குப் புறப்பட்டார். இன்றும் நாளையும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு கட்சி நிகழ்வுகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார். புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மீண்டும் சென்னை வரும் அவர், இங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்குத் திரும்புவார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் வரும் தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிடுவது குறித்து அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
