மஞ்சள் நகரம் எனப் புதிதாகக் கண்டுபிடிப்பது வேடிக்கை - விஜய்க்கு பதிலடி; திமுக-வை 'தீய சக்தி' எனச் சாடல்!
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசியல் சூழல், 2026 தேர்தல் கூட்டணி மற்றும் தவெக தலைவர் விஜய்யின் கருத்துகள் குறித்துக் காரசாரமான பதில்களை வழங்கினார். கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், திமுக அரசைத் 'தீய சக்தி' எனச் சாடிய அவர், அதிமுக-வுடனான உறவு குறித்தும் முக்கியத் தகவலைப் பகிர்ந்தார்.
பாஜக - அதிமுக கூட்டணி தற்போது மிகவும் வலுவாக உள்ளது என்று தமிழிசை தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிச்சயம் வெற்றி பெறும் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஈரோட்டில் விஜய் ஆற்றிய உரை குறித்துப் பேசுகையில், கோவை, ஈரோடு பகுதிகள் பற்றி பாஜக-வுக்கு நன்றாகத் தெரியும்; சிலர் புதிதாக வந்து கோவையை மஞ்சள் நகரம் எனப் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார். மஞ்சளுக்கெனத் தனி வாரியம் அமைத்ததே பாஜக தான் என்பதையும் அவர் நினைவூட்டினார்.
திமுக ஒரு தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை; அந்த நிலைமையை விஜய்யும் தற்போது சொல்ல வேண்டிய சூழல் வந்துள்ளது" என அவர் குறிப்பிட்டார். மேலும், விஜய்யின் திமுக எதிர்ப்பை வரவேற்பதாகவும், அவர் மக்களுடன் டிக்கெட் வாங்கித்தான் இணைப்பை ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முருக பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்; இதற்கு ஸ்டாலின் அரசு கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனத் தமிழிசை வலியுறுத்தினார். இதில் முதலமைச்சருக்கு ஈகோ பிரச்சனை இருப்பதாகவும், இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
விமான நிலையங்கள், துறைமுகங்கள் என மத்திய அரசு செய்துள்ள விரிவாக்கப் பணிகள் எதையுமே புரிந்து கொள்ளாமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார் என்று சாடினார். மேலும், 100 நாள் வேலைத் திட்ட ஊழலில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
