நடிகை சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிதிமோரை கோவையில் உள்ள லிங்க பைரவி சன்னிதியில் 'பூதசுத்தி விவாஹா' முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான சமந்தா, பிரபல பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ராஜ் நிதிமோரை இன்று (டிசம்பர் 1) கோவை ஈஷா யோகா மையத்தில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட இந்தத் தம்பதியினரின் திருமணம், மிகவும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிதிமோர் ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று காலை 'பூதசுத்தி விவாஹா' (Bhuta Shuddhi Vivaha) என்ற சிறப்பு யோக முறையில் நடைபெற்றது. இந்தத் திருமணம் குறித்துச் சமந்தா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதபோதும், ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜ் நிதிமோர் இருவருக்கும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க பைரவி தேவி சன்னிதியில் நடைபெறும் 'பூதசுத்தி விவாஹா' திருமணச் செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இது தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை வழங்குகிறது.
இயக்குநர் ராஜ் நிதிமோர் மற்றும் கிருஷ்ணா டி.கே. இருவரும் இணைந்து 'ராஜ் & டி.கே.' என்ற பெயரில் பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை இயக்கியும், தயாரித்தும் வருகின்றனர். இவர்கள் இயக்கித் தயாரித்த 'தி ஃபேமலி மேன்', 'ஃபார்ஸி', 'கன்ஸ் அண்டு குலாப்ஸ்' உள்ளிட்ட இணையத் தொடர்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ராஜ் நிதிமோர் இயக்கிய 'தி ஃபேமலி மேன் 2'-ம் பாகத்தில் தான் சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா, முன்னதாக 2017ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றார். நாக சைதன்யா கடந்தாண்டு நடிகை சோபிதா துலிபாலாவைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதிமோரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
.jpg)