கடன் வாங்குவதில் முதலிடம் பிடித்ததுதான் ஸ்டாலின் அரசின் சாதனை; அதிமுக தேர்தல் அறிக்கை விரைவில்!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, பொங்கல் பரிசுத் தொகை மற்றும் தமிழகத்தின் கடன் சுமை குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் 'ஹாட்' டாபிக்காக மாறியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், ஆனால் இந்த திமுக ஆட்சியில் மக்கள் பொங்கலைக் கொண்டாட முடியாமல் தவிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டார். இப்போது அவர் முதல்வராக இருக்கிறார், எனவே சொன்னபடி இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். இதுதான் இந்த மக்கள் விரோத திமுக அரசுக்கு இறுதி ஆண்டு, இனி அவர்கள் ஆட்சிக்கு வர முடியாது" என்று ‘கறார்’ ஆகத் தெரிவித்தார்.
தமிழகத்தின் கடன் சுமை குறித்துப் பேசிய ஈபிஎஸ், "73 ஆண்டு கால வரலாற்றில் தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. ஆனால், இந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில் மட்டுமே மேலும் 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு வந்ததுதான் ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை. தேர்தல் அறிக்கையில் சொன்ன 525 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார்கள். 5.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறிவிட்டு, தற்போது வரை எதையும் செய்யவில்லை" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்துப் பேசுகையில், "இறந்தவர்களை வைத்துப் போலி வாக்குகள் போட்டு வந்த திமுகவிற்கு, தற்போது SIR பணிகள் மூலம் செக் வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பதறுகிறார்கள். உண்மையான வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருக்க வேண்டும் என்பதை அதிமுக வரவேற்கிறது" என்றார்.
