"மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி": முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (டிசம்பர் 7) மதுரையில் நடைபெற்ற 'தமிழ்நாடு வளர்கிறது' முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்டு, மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பேசினார். இந்த மாநாட்டில், ஒரே நாளில் ₹36,660 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாகக் கிட்டத்தட்ட ₹36,660 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, இதன் மூலம் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உறுதியாகியுள்ள முதலீடுகள் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தைவான் நாட்டைச் சேர்ந்த ‘Pei Hai’ குழுமம், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் திட்டத்தை மதுரையில் நிறுவ முன்வந்துள்ளது. இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு (அதில் பெரும்பாலனவை பெண்களுக்கு) வேலைவாய்ப்புகள் கிடைக்கவிருக்கிறது.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு தான் என்ற நிலையை உருவாக்கினோம். அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், 'TN Rising' மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டங்கள் தோறும் பரவலான வளர்ச்சி' என்று சொன்னதை எங்களுடைய செயல்கள் மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்!"
ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 11 இலட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு வந்திருக்கிறோம். 34 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு 'அவுட்புட்' காண்பித்தது இல்லை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுடன் இணைந்து, விருதுநகர் மாவட்டத்தில், ஆயிரத்து 894 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரத்து 52 ஏக்கர் பரப்பளவில், PM மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை உருவாக்கி வருகிறது.
இந்தப் பூங்கா முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, கிட்டத்தட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இது மாநிலத்தின் ஜவுளி உற்பத்தித் துறையை மேம்படுத்தும்.
மதுரை எப்போதும் விழிப்புடன் இருக்கக்கூடிய நகரம் என்றும், வைகை ஆற்றங்கரையில் அமைந்த கீழடியில் கிடைத்த சான்றுகள் இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுத வைத்திருக்கிறது என்றும் முதலமைச்சர் பெருமிதம் கொண்டார்.
