28 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை விரிவாக்கம்: பொங்கல் பரிசுடன் ரொக்கத்தொகை குறித்து முதல்வர் ஸ்டாலின் இறுதி முடிவு!
அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன் புதிய திட்டப்பணிகளை விரைந்து தொடங்குவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக, இந்த டிசம்பர் மாதத்தில் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம்:
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் திட்டத்தின் முதல் கட்டமாக, 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் தொடக்கப் பணிகள் டிசம்பரில் நடைபெற உள்ளன.
மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம்:
இந்தத் திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க, 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மொத்தம் 28 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வரையறை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு டிசம்பர் 15-ந் தேதி முதல் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம்:
ஜனவரி மாதம் செயல்படுத்தப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்திற்கான இறுதி முடிவுகள் டிசம்பர் மாதத்திலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, வழக்கமான பொங்கல் தொகுப்புடன் ரொக்கத் தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ள நிலையில், அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த 3 மெகா திட்டங்கள் மூலம், தமிழக அரசு தேர்தலுக்கு முன் மக்கள் நலத் திட்டங்களை அதிரடியாகச் செயல்படுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது.
