தமிழர் வரலாற்றை மறைக்கப் பார்க்கும் மத்திய அரசு - எடப்பாடி பழனிசாமி ஒரு ‘போலி விவசாயி’ என முதலமைச்சர் சாடல்!
பாஜக அரசு 100 நாள் வேலை திட்டத்தை முடக்கி ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதை அதிமுக வேடிக்கை பார்ப்பதாக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தமிழர்களின் தொன்மையான பண்பாடு மற்றும் வரலாற்றுச் சான்றுகள் குறித்துப் பேசிய அவர், தமிழரின் தனித்துவமான பண்பாட்டுக்கு எத்தனையோ இலக்கியங்கள் இருந்தாலும், அவற்றை வரலாற்றுச் சான்றுகளாக மாற்றுவதற்கு அறிவியல் ரீதியான தொல்லியல் சான்றுகள் மிக அவசியம் என்றார். அதற்காகவே தமிழக அரசு அகழாய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் தமிழர்களின் வரலாற்றுத் தன்மையை உலகுக்குத் தெரியப்படுத்தக் கூடாது, அறிவியல் பூர்வமான முடிவுகளை வெளியிட விடக்கூடாது என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். தமிழ் மற்றும் தமிழர்கள் மீது வெறுப்போடு இருப்பவர்களை எதிர்த்துத் தாங்கள் உறுதியுடன் போராடி வருவதாகவும், இது 2000 ஆண்டு கால சண்டை என்பதால் இதில் தமிழர்கள் ஒருபோதும் தோற்க மாட்டார்கள் என்றும் அவர் முழங்கினார்.
மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்த போதிலும், இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதை முதல்வர் சுட்டிக்காட்டினார். ஆனால், தமிழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு, அங்கு கிடைத்த பொருட்களை வைக்க அருங்காட்சியகங்களை அமைத்துவிட்டதாகப் பெருமிதம் தெரிவித்தார். கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களின் சிறப்பை உலகம் கவனித்து வருவதாகவும், அவற்றை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும் இந்த விழாவின் வாயிலாக அழைப்பு விடுத்தார். திராவிட மாடல் அரசு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசு கிடையாது, அது ஒரு இனத்தின் அரசாகச் செயல்படுகிறது என்று கூறிய அவர், வெளியில் நம்மை எதிர்ப்பவர்கள் கூட தமிழர்களுக்காகப் போராடுவது திமுக தான் என்பதை மனதில் வைத்துப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், குறிப்பாக மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளதை மிகக் கடுமையாகச் சாடினார். மதச்சார்பின்மை மற்றும் மத ஒற்றுமையை வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய காந்தியின் பெயரை இந்தத் திட்டத்திற்கு வைக்க பாஜகவிற்கு விருப்பம் இல்லை என்றும், அதனால்தான் காந்தியின் பெயரை நீக்கிவிட்டு யாருக்கும் புரியாத ஹிந்தி பெயரைச் சூட்டியுள்ளதாகவும் கூறினார். பெயரை நீக்கியது மட்டுமன்றி, அந்தத் திட்டத்தையே மொத்தமாக முடக்கி ஏழை மக்களின் வயிற்றில் பாஜக அரசு அடித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் வேளாண் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு நாள் கூட விவாதம் நடத்தப்படவில்லை என்பதை வேதனையுடன் குறிப்பிட்டார்.
இந்த அநியாயங்களுக்கு அதிமுக துணை போவதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று முதல்வர் தெரிவித்தார். தன்னை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் ‘போலி விவசாயி’ எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலை திட்டம் முடக்கப்பட்டதற்கு எதிராக இதுவரை ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்று விமர்சித்தார். சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரித்தது போலவே, தற்போது ஏழை மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் போதும் அதிமுக அமைதி காப்பது துரோகமானது என்றார். மத்திய அரசு எத்தனை தடைகளைத் தந்தாலும் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதியளித்த அவர், அடுத்தும் திமுக ஆட்சி தான் அமையப்போகிறது என்றும், மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையைத் தமிழக அரசு கூடுதலாக்கி வழங்கி வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் கொடுத்த ரூபாயைத் திரும்பக் கேட்பதாகவும் சுட்டிக்காட்டினார். "தமிழ்நாடு வளரும், தமிழ்நாடு வெல்லும்" என்று கூறி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
