விஜய்யின் பிரச்சார வாகன விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏன் கருணை? – தமிழக அரசுக்கு நீதிபதி செந்தில் குமார் சரமாரி கேள்வி.
சென்னை, அக்டோபர் 3, 2025: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான பொதுநல வழக்கு இன்று (அக். 3) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க.) கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்றும், விஜய்க்குத் தலைமைப் பண்பு இல்லை என்றும் கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்தார்.
நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது:
பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், முதலில் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். கரூர் துயரச் சம்பவத்திற்குக் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். இந்த வழக்கில் அரசு அமைதியாக இருக்க முடியாது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக 2 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தது ஏன்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏன் கருணை காட்டுகிறீர்கள்? கரூர் நெரிசல் விவகாரத்தில் சேதங்களை கணக்கிட்டீர்களா? ஏன் இவ்வளவு தாமதம்?" என்றும் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார்.
விஜய் மீதான கடும் விமர்சனம்:
நீதிபதி செந்தில் குமார், த.வெ.க. தலைவர் விஜய் மீதும், அவரது கட்சியினர் மீதும் கடுமையான வார்த்தைகளால் தனது கோபத்தைக் காட்டினார். அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்திய கட்சியினர் ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தொண்டர்கள், ரசிகர்கள், மக்களைக் கைவிட்டுப் பொறுப்பற்ற முறையில் தலைவர் வெளியேறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் தலைவர் என்பதை மொத்தமாக மறந்துவிட்டார். அவருக்குத் தலைமைப் பண்பே இல்லை, என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.
விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? பிரச்சார வாகனத்தைப் பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்றும் நீதிபதி வினவினார்.
பொதுநல மனுதாரர் தனது மனுவில், இந்தச் சம்பவத்திற்குக் காரணமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்த நிலையில், சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்றும், அதற்கான உத்தரவை தான் பிறப்பிப்பதாகவும் நீதிபதி செந்தில் குமார் தெரிவித்தார். இந்த வழக்கில் நீதிபதியின் கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துத் த.வெ.க.வினர் எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
