கரூர் சோகம் குறித்துப் பதிவிட்ட நடிகை ஓவியா; 'குடித்துவிட்டு கார் ஏற்றி கொலை செய்யப் பார்த்தாயே' என ரசிகர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பியதால், பதிவை நீக்கி ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டார்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பெரும் துயரம் தொடர்பாக, நடிகை ஓவியா அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என்று அதிரடியாகப் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்குத் த.வெ.க. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஓவியா தனது பதிவை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என்ற ஓவியாவின் பதிவுக்கு எதிராக,குடிச்சிட்டு காரை ஏற்றிப் பல பேரைக் கொலை செய்யப் பார்த்தாயே, உன்னை ஏன் கைது செய்யக் கூடாது? என்றும், இதற்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்தபோது நீ ஏதும் பேசினாயா? முதலில் உன்னைக் கைது செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் சரமாரியாகப் பதிவிட்டு விமர்சனம் செய்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். விமர்சனத்தின் வீரியம் அதிகரித்த நிலையில், ஓவியா தனது பதிவை சரசரவென நீக்கினார்.
மேலும், தனக்கு எதிராக வந்த கடும் விமர்சனங்களைச் ஸ்கிரீன் ஷாட் எடுத்து மீண்டும் தனது பக்கத்தில் திரைசேர்க்கை செய்து பதிவிட்டுள்ளார். கரூர் சோக விவகாரத்தில், சினிமா பிரபலங்கள் அரசியல் கருத்துகளைப் பகிர்வது பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
