துர்காப்பூர் தனியார் கல்லூரி வளாகம் அருகே பயங்கரம்; ஒடிசா மாணவிக்குக் கொடூரம்; நண்பரிடம் விசாரணை!
மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர், மேற்கு வங்க மாநிலம் பாஷ்சிம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள துர்காப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு வெளியே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த அந்த மாணவி, மாலை நேர உணவுக்காகத் தனது நண்பருடன் கல்லூரி வளாகத்திற்கு வெளியே சென்றுள்ளார். உணவருந்திவிட்டு திரும்பியபோது, அப்பெண்ணின் நண்பர் கடந்து சென்றதும், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மாணவியைத் தாக்கி, அவரது செல்போனைப் பறித்துள்ளனர். பின்னர், அவரைக் கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள ஒரு காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து யாரிடமேனும் புகார் அளித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதுடன், அவரது செல்போனைத் திரும்பக் கொடுக்கப் பணம் வேண்டும் என்றும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. மீட்கப்பட்ட மாணவி உடனடியாக துர்காப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மாணவியுடன் சென்ற நண்பரையும் பிடித்து இச்சம்பவத்தில் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மாணவியின் தந்தை, கல்லூரியில் பாதுகாப்புச் சரியாக இல்லை என்று குற்றம் சாட்டியதுடன், உடன் சென்ற நண்பருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் குழு ஒன்று பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரைச் சந்திக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை வன்மையாகக் கண்டித்துள்ள ஆணையம், காவல்துறையின் மெத்தனப் போக்கையும் விமர்சித்துள்ளது. ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் கூறுகையில், தண்டனைகள் விரைவாக வழங்கப்படாததால் தான் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகின்றன, முதலமைச்சர் மமதா பானர்ஜி இந்த விவகாரத்தில் முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கல்லூரி மாணவர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் கட்சிகள், கல்லூரி வளாகப் பாதுகாப்புக் குறைபாடு மற்றும் சட்டம்-ஒழுங்கின் சீர்கேடு ஆகியவற்றைக் கண்டித்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, மாநில அரசின் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. கடந்த ஆண்டு இதே மேற்கு வங்கத்தில் ஒரு பயிற்சி மருத்துவர் கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட சுவடுகளே இன்னும் அழியாத நிலையில் அடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவம், மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.