15 நாட்களாகக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் தவிப்பு; வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மறு நடவுக்கும் வழியின்றி அவதி!
தஞ்சாவூர், அக். 8: தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை மண்டல முதுநிலை மேலாளர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், அலட்சியப் போக்கு காரணமாகவும் மாவட்டத்தில் உள்ள 287 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன என்று விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால், தாங்கள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமலும், மறு நடவு செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
மழையிலும் வெயிலிலும் அவதி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மடிகை, துறையூர், துறையுண்டார் கோட்டை, காசாநாடு புதுர், சூரக்கோட்டை காட்டூர், வாண்டையார் இருப்பு உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் நெல்லைக் கொண்டு வந்துள்ளனர். கடந்த 15 நாட்களாக எந்தக் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கொள்முதல் நிலைய வாசலிலும், சாலை ஓரங்களிலும் நெல்லைக் கொட்டி வைத்து இரவு பகலாகக் காத்துக் கிடக்கின்றனர்.
மாலை நேரங்களில் மழை பெய்து நெல் நனைவதும், காலையில் காய வைப்பதுமாக நிலைமை நீடிப்பதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. மேலும், நெல்லைக் கொட்டி வைக்கப் போதுமான இடமோ, மழையிலிருந்து பாதுகாக்கத் தார்பாய்களோ இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
விவசாயிகளின் வேதனை
மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் நீர் திறக்கப்பட்டதால் கடன் வாங்கி நடவு செய்ததாகக் கூறிய விவசாயி துரைமுருகன், தனது வேதனையை இவ்வாறு பகிர்ந்துகொண்டார். அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் 10 நாட்களாகத் தேக்கம் அடைந்துள்ளோம். டெல்டாவில் மழை பெய்வது தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆனால், விவசாயிகள் கஷ்டப்படுவது அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.
விளைவித்த நெல்லை விற்க முடியவில்லை. இதனால் வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை. பிள்ளைகளுக்குப் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. மறு நடவு செய்வதற்கும் வழி இல்லாமல் உள்ளோம்.
விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகள்
இந்த ஆண்டு வழக்கத்தைவிடக் கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் முன் திட்டமிடல் இல்லாததே இந்தத் தேக்கத்திற்குக் காரணம் என்று விவசாயிகள் சாடுகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு, தேக்கமடைந்துள்ள நெல்லை விரைவாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைக்கேற்ப கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லைக் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

