அதிகாலை முதலே படுஜோராக விற்பனை; மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு காற்றில் பறந்தது!
கோவை, அக். 2: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், கோவையில் உள்ள ஒரு அரசு மதுபானக் கடைக்கு வெளியே அதிகாலை முதலே கள்ளச் சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுப் பிரியர்கள் இதனால் உற்சாகமடைந்தனர்.
தடை உத்தரவை மீறிய விற்பனை
இன்று அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம் என்பதால், மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்புடன் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி அனைத்து மதுக்கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
இருப்பினும், கோவையில் பேரூர் படித்துறை அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண். 1767-ன் அருகே, இன்று காலை 8 மணிக்கே மது விற்பனை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.
மதுப் பிரியர்கள் உற்சாகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இங்கு சிறப்பு விற்பனை நடைபெறுவதாக மதுப் பிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்று அறிவித்த நிலையில், இந்தக் கட்டுப்பாட்டுக் காற்றில் பறக்கவிடப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சட்ட விதிகளை மீறிச் செயல்படும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
