தவெகவை வைத்து பாஜகவும், அதிமுகவும் அரசியல் நாடகம் போடுவது பகல் கனவு: சிபிஎம் பாலகிருஷ்ணன் சாடல்! Balakrishnan Slams BJP-AIADMK for Political Drama Using TVK Calls it Daydream

கரூர் விபத்தில் த.வெ.க. தலைவர் பொறுப்பில்லாமல் செயல்பட்டார்: முதல்வர் முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்!

தஞ்சாவூர், அக்டோபர் 13: தஞ்சாவூரில் இன்று (அக். 13) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) பயன்படுத்தி பாஜகவும், அதிமுகவும் தமிழகத்தில் அரசியல் நாடகத்தை நடத்த விரும்புகின்றன; ஆனால், அது பகல் கனவாகவே முடியும் என்று கடுமையாகச் சாடினார்.

கரூர் விபத்து மற்றும் சிபிஐ விசாரணை:

உச்ச நீதிமன்ற உத்தரவு: கரூர் விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சூழலில், அவர்கள் விசாரிப்பதில் தவறு கிடையாது. விசாரித்து யாரிடம் தவறு இருக்கிறது, யார் பொறுப்பு என்பதை நீதிமன்றமே சொல்லும் போது நாம் அனைவரும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாநில அரசு தரப்பில் குறைபாடுகள் இருந்தால் அதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்ட வேண்டும்.

மனுதாரர்கள் மீதான சந்தேகம்: இந்த வழக்கில், வழக்கு போட்டவரே எனக்கு சம்பந்தம் இல்லாமல் வழக்கு போட்டு விட்டார் என ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவர், தனது கணவரை மிரட்டியும், ஆசை காட்டியும் வழக்கு போட வைத்துள்ளனர் எனப் பல தகவல்கள் உலா வருகின்றன. இதை உச்ச நீதிமன்றம் விசாரித்ததா எனத் தெரியவில்லை.

த.வெ.க. தலைவர் செயல்பாடு குறித்து கவலை: இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகு, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள த.வெ.க. தலைவர், ஆறுதல் கூறாமல், அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவி எதையுமே செய்யாமல், அவசர அவசரமாகப் பறந்து சென்று சென்னைக்குச் சேர்ந்திருப்பது ஒரு நல்ல பண்பாகத் தெரியவில்லை என்பதை நான் கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எந்த ஒரு அரசியல் தலைவரும் இப்படி இருப்பாரா? என்கிற கேள்வி எழுகிறது.

அதிமுக - பாஜகவின் அரசியல் நாடகம்:

தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) பயன்படுத்தி பாஜகவும், அதிமுகவும் தமிழகத்தில் அரசியல் நாடகத்தை நடத்த விரும்புகிறார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களின் நாடகம் வெற்றிபெறாது. அது ஒரு பகல் கனவாகத்தான் போய் முடியும். சட்டமன்றத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், நிலுவையில் உள்ள முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். 

போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: போக்குவரத்துத் தொழிலாளர்கள் 50 நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வை காணுவது அரசின் பொறுப்பு. அரசு இதுவரை தலையிடவில்லை என்றால், யார் தலையிட முடியும்?

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் என அனைத்துத் துறைகளிலும் தொகுப்பு ஊதியம், மதிப்பு ஊதியம் அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளிகள் என்கிற பெயரில் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது நியாயம் அல்ல. திமுக அரசு அவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஒரு மூட்டைக்கு ரூ.40, ரூ.50 மாமூல் வாங்கப்படுகிறது. விவசாயிகள் வயிறெரிந்து உள்ளனர். அரசு இதை ஏன் அனுமதிக்கிறது? அரசின் ஊழல் தடுப்பு துறை என்ன செய்கிறது? மாமூல் வாங்குவது, பிக் பாக்கெட் கொள்ளை அடிப்பது போல நடந்து கொண்டிருக்கிறது. அரசு இதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் கடுமையாகக் கேட்டுக் கொண்டார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk