கரூர் கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ன? - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்!
விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததுதான் முக்கியக் காரணம்: அதிமுக அமளிக்குப் பிறகு முதல்வர் கருத்து!
சென்னை, அக்டோபர் 15: தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க.) தலைவர் விஜய் அவர்கள் கரூரில் நிகழ்ச்சிக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கியக் காரணம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (அக். 15, 2025) சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கம்:
கரூர் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்துக்கும் உள்ளாக்கியது. இறந்துபோனவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.
கடந்த செப். 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அனுமதி கோரிய இடங்களில், போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்குத் தொல்லை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை. வேலுசாமிபுரம் அனுமதி: பின்பு செப். 25 அன்று, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கோரியதையடுத்து, வேலுசாமிபுரத்தில் 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட மொத்தம் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10,000 பேர் வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைவிடக் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து வழக்கத்தைவிட அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கூட்டம் நடத்த மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என அனுமதி கோரிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்குக் கட்சியின் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
செப். 27-ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு, நாமக்கல் நிகழ்ச்சிக்குப் பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்குத்தான் வந்துள்ளார். அதாவது, அறிவிக்கப்பட்ட 12 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் கடந்துதான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியாகத் தெரிவித்தார்.