மதுரை வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் திறப்பு: உற்சாக வரவேற்புடன் தோனி பங்கேற்பு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்கள், மதுரையில் ரூ. 325 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தைத் திறந்து வைத்தார். தோனியின் வருகைக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
தோனி இன்று (அக்டோபர் 9, 2025) பிற்பகல் 1 மணிக்குச் சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தை அடைந்தார். தொடர்ந்து 1.25 மணிக்கு வேலம்மாள் மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையால், சிந்தாமணி ரிங் ரோட்டில் 11.5 ஏக்கர் பரப்பளவில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
தோனி சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே மதுரையில் இருந்தார். அவர் மைதானத்தைத் திறந்து வைத்த பிறகு, 15 நிமிடங்கள் மட்டுமே மாணவர்களுடன் உரையாடுவார் என வேலம்மாள் கல்வி அறக்கட்டளை அறிவித்திருந்தது.
மைதானத்தின் சிறப்பம்சங்கள்:
தமிழ்நாட்டின் 2-வது பெரிய மைதானம்: சென்னை சேப்பாக்கத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இது அமைகிறது. இதில் வீரர்கள் ஓய்வறை, உடற்பயிற்சிக் கூடம், மருத்துவ வசதிகள், போதுமான பார்க்கிங் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு போன்ற வசதிகள் உள்ளன.
இந்த கேலரி 20,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 7,300 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மைதானம் எதிர்காலத்தில் டிஎன்பிஎல், ரஞ்சி டிராபி மற்றும் ஐபிஎல் போட்டிகளை நடத்த முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
