போலி நம்பர் பிளேட், ஃபாஸ்ட் டேக் பயன்படுத்திய இருவர் கைது; சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி!
சென்னை, அக்டோபர் 16: சரக்கு ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குக் கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேரைச் சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், நேற்று (அக். 15) தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான செங்குன்றத்தை அடுத்த காரனோடை சுங்கச்சாவடி பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான ஒரு சரக்கு ஆட்டோவை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.
சோதனை செய்தபோது, வாகனத்தின் அடிப்பகுதியில் ஒரு ரகசிய அறை அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கஞ்சா பாக்கெட்டுகள் கொண்ட 320 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு சர்வதேசச் சந்தையில் ரூபாய் 2 கோடி இருக்கும் என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசடி மற்றும் கைது:
விசாரணையில், கஞ்சா கடத்தலுக்காகக் குற்றவாளிகள் போலி நம்பர் பிளேட் வைத்தும், சுங்கச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக போலி ஃபாஸ்ட் டேக்கை ஒட்டியும் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர். இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக, வாகன ஓட்டுனர் உட்பட இருவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.