பழுதான அரசு ஏசி பேருந்து: பயணிகள் தள்ளிச் சென்று நிறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
கரூரில் கிளட்ச் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு குளிர்சாதன பேருந்தை, பயணிகள் மற்றும் பொதுமக்கள் தள்ளிச் சென்று சாலை ஓரத்தில் நிறுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்தைச் சேர்ந்த இந்த ஏசி பேருந்து, கரூர் - திருக்காம்புலியூர் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகே திடீரென நின்றது.
இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அவதிக்குள்ளாகினர். பின்னர், பேருந்திலிருந்த பயணிகளும், அந்த வழியாகச் சென்ற பொதுமக்களும் இணைந்து பேருந்தைத் தள்ளிக்கொண்டு சென்று சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்தனர்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஏசி பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதும், அதை பயணிகள் தள்ளிச் சென்றதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.