தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் விழாவையொட்டி, திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
தி.மு.க. ஆட்சி குறித்து:
தி.மு.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால், தி.மு.க. ஆட்சியை நிச்சயம் அகற்ற முடியும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியை விட்டுப் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்; அதுகுறித்து நான் பேசுவது சரியாக இருக்காது," என்று பதிலளித்தார்.
கூட்டணி மாற்றம்:தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் விலகியது குறித்துக் கேட்டபோது, "அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். ஆட்சி மாற்றம் வரும், நிச்சயம் நல்லது நடக்கும்," என நம்பிக்கை தெரிவித்தார்.
கட்சி விவகாரம்:பா.ஜ.க.வில் குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு, "பா.ஜ.க.வில் குடும்ப அரசியல் இல்லை," என்று பதிலளித்தார். மேலும், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து, "அதுகுறித்து அவர் கட்சித் தலைமையிடம் முன்பே தெரிவித்துவிட்டார்," என்று விளக்கமளித்தார்.
