அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) 10 நாட்கள் காலக்கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து, கட்சி அலுவலகத்துக்குப் பிரசார வாகனத்தில் வந்த செங்கோட்டையன், வாகனத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.
செங்கோட்டையன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
சவாலான தேர்தல்கள்: 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2019, 2021 மற்றும் 2024 என அனைத்துத் தேர்தல்களிலும் கட்சி பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. 2024 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என நானும், வேலுமணியும் வலியுறுத்தினோம்.
ஒருங்கிணைப்பு அவசியம்: கட்சி தொய்வடைந்துள்ள நிலையில், வெளியே சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
இபிஎஸ்-க்கு காலக்கெடு: பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் கட்சிக்குள் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பொதுச்செயலாளரின் பிரசாரத்தில் பங்கேற்பேன். இல்லையென்றால், ஒரே மனப்பான்மையுடன் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பிரிந்தவர்களை மீண்டும் இணைக்கும் பணிகளை நாங்களே மேற்கொள்வோம்.
அ.தி.மு.க. தொண்டர்களின் மகிழ்ச்சிக்காக அனைத்து தியாகங்களையும் செய்துள்ளதாகக் கூறிய செங்கோட்டையன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சி உடையாமல் இருக்கவே அமைதியாக இருந்ததாகவும் தெரிவித்தார்
