அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) 10 நாட்கள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
பின்னணி:
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், கட்சியை விட்டு விலகியவர்களை 10 நாட்களில் பழனிசாமி ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்படி ஒருங்கிணைக்கவில்லை என்றால், ஒரே மனப்பான்மையுடன் உள்ளவர்கள் இணைந்து, பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் பணியில் தாங்களே ஈடுபடுவோம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
செங்கோட்டையனின் இந்த பேட்டிக்கு பின்னர், திண்டுக்கல்லில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கை அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.