சுதந்திரத்திற்கு முன்பே 75 கிராமங்களுக்குச் சென்ற பெருமை; தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அரிய வகை நூல்கள் பராமரிப்பு!
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, கிராமப்புற மக்களின் அறிவுக் கண்ணைத் திறக்க, மாட்டு வண்டியில் புத்தகங்களை ஏற்றிச் சென்று கல்வியறிவைப் பரப்பிய ஒரு புரட்சிகரமான முயற்சி குறித்த தகவல் வெளியாகி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் முதல் நடமாடும் மாட்டு வண்டி நூலகம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் நூலகம் என்றால் என்னவென்று அறியாத மக்களிடம் அறிவைப் பெருக்கியுள்ளது.
தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில், 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நூலகத்தில் லட்சக்கணக்கான அரிய வகை நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள், தமிழ், ஆங்கிலம், மராத்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 88 ஆயிரம் நூல்களும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை நூல்களும் அடங்கும். பழமையான இலக்கண நூல்கள், ஆய்வு நூல்கள் மற்றும் முதன்முதலில் அச்சிடப்பட்ட திருக்குறள் பதிப்புகள் போன்ற பொக்கிஷங்கள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன. உள்நாட்டில் மட்டும் இல்லாமல், கனடா, மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வு மேற்கொள்வது இதன் பெருமையைப் பறைசாற்றுகிறது.
ஆனால், இந்தச் செழுமையான அறிவுப் பாரம்பரியத்திற்கு அடித்தளமிட்டது, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மட்டுமல்ல. 1931 ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கனகப்பிள்ளை என்பவர், பொதுமக்களின் அறிவுப் பசியைப் போக்க ஒரு புதுமையான முயற்சியைத் தொடங்கினார். அதுதான் இந்தியாவின் முதல் நடமாடும் மாட்டு வண்டி நூலகம்.
இந்த மாட்டு வண்டியில் 3285 அரிய வகை நூல்களை ஏற்றி, திருவாரூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், சுமார் 75க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, மக்களிடையே படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. கிராம மக்கள் தங்களுக்குத் தேவைப்படும் நூல்கள் குறித்துத் தெரிவித்தால், மாட்டு வண்டியே அவர்களின் கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கி, புத்தகங்களைப் படிக்க வாய்ப்பளித்துள்ளது. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மக்களின் கரங்களைச் சென்றடைந்துள்ளன.
தமிழர்களின் அறிவாற்றலை மேம்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த மாட்டு வண்டி நூலகம் ஒரு வாழும் சான்றாக உள்ளது. 1933 ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகம் விழாவின் போதும், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்க விழாக்களின் போதும் இந்த நூலகம் அங்குச் சென்று, மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாட்டு வண்டி நூலகத்தின் வெற்றிக்குப் பிறகு, 1934 ஆம் ஆண்டு சைக்கிள் நூலகமும், 1935 ஆம் ஆண்டு ஆந்திராவில் படகு நூலகமும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முன்னோடி முயற்சிகள்தான் இன்றைய தலைமுறைக்கு நூலகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.